Enable Javscript for better performance
நாமக்கல் அருகே மகாமாரியம்மன் கோயில் திருவிழா: 1,000 ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் அருகே மகாமாரியம்மன் கோயில் திருவிழா: 1,000 ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

    By DIN  |   Published on : 27th March 2019 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் அருகே மகாமாரியம்மன், கோயில் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
     நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம் எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை பீமநாயக்கனூர் ஊராட்சி உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதத்தில் இக் கோயில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
     நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி பகுதிகளில் வசிக்கும் போயர் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் திருவிழாவைக் கொண்டாட இரு தினங்களுக்கு முன் பீமநாயக்கனூர் வந்தனர். கோயில் முன்பாக கொட்டகை அமைத்து அம்மன் வழிபாட்டில் ஈடுபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை ஆடுகள் பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வைபவம் நடைபெற்றது.
     திருவிழாவையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கோயில் முன்பாகவும், பீமநாயக்கனூரில் உள்ள முக்கிய வீதிகளிலும் பலியிடப்பட்டன. பின்னர், பக்தர்கள் தங்களது உறவினர்களுக்கு அங்கேயே சமைத்து கிடா விருந்து படைத்தனர். காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டதால், பீமநாயக்கனூர் முழுவதும் ஆங்காங்கே ஆடுகளின் உதிரம் தண்ணீர்போல் சாலையில் ஓடியது.
     இது குறித்து, கோயில் பூசாரி மணிகண்டன் கூறியது; ஒவ்வோர் ஆண்டும் மாசி அல்லது பங்குனி மாதத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறும். பல்வேறு பிரச்னைகளால் கடந்த மூன்று ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. போயர் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர் இக் கோயில் தலைக்கட்டாக உள்ளனர்.
     திருவிழாவின்போது நடைபெறும் ஆடு பலியிடும் நிகழ்ச்சியே இங்கு பிரசித்தி பெற்றது. ஆயிரம் ஆடுகள் என்று சொல்லமுடியாது, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டுள்ளன. புதன்கிழமையும் ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் தங்களது உறவினர்களுக்கு கோயில் வளாகத்திலேயே சமைத்து விருந்து படைத்து வருகின்றனர் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai