Enable Javscript for better performance
எம்.பி.யானால் ஊதியம் முழுவதையும் மக்கள் நலனுக்காக செலவழிப்பேன்: கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ- Dinamani

சுடச்சுட

  

  எம்.பி.யானால் ஊதியம் முழுவதையும் மக்கள் நலனுக்காக செலவழிப்பேன்: கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ்

  By DIN  |   Published on : 28th March 2019 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வானால், என்னுடைய 5 ஆண்டுகால ஊதியம் முழுவதையும் மக்கள் நலனுக்காக செலவழிப்பேன் என்றார் கொ.ம.தேக. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ்.
  நாமக்கல்  மக்களவைத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்,  கொ.ம.தே.க.வைச் சேர்ந்த ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் புதன்கிழமை மாலை செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
  இக்கூட்டத்தில் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை அறிமுகம் செய்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திச்செல்வன் பேசியது: கடந்த 5 ஆண்டுகளில்,  மத்திய, மாநில அரசுகள்,  மக்கள் மீது கடும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளன. கேபிள்,  சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதால் சாமானியர்கள் சிரமப்படுகின்றனர். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதும், கேபிள் கட்டணம் ரூ.100-ஆக குறைக்கப்படும். விவசாயக் கடன், கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சமையல் எரிவாயு விலை, பழைய முறையிலேயே மாற்றியமைக்கப்படும். நாமக்கல்லில், கோழிப்பண்ணை, லாரி, ரிக் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. போன்வற்றால் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கு பின் இந்த நிலை மாறும் என்றார். 
  அதைதொடர்ந்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்  பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியது: 2004-ஆம் ஆண்டு தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்து. அதேபோல் 2019 - ஆம் ஆண்டிலும் மிகப்பெரிய வெற்றியை பெறும். மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றம் வரவேண்டும்.
  மக்கள் நலனுக்காக பாடுபடும் அரசு அமைய வேண்டும். நாமக்கல்லில் 7 ஆண்டுகளாகியும், இதுவரை புதிய பேருந்து நிலையம் அமையவில்லை. நகரைச் சுற்றிலும் சுற்றுவட்டப்பாதை அமையும் என்றார்கள் அதுவும் நடக்கவில்லை. திருமணிமுத்தாறு திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். விரைவில் அதற்கான மாற்றம் வரும் என்றார்.
  வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் பேசியது: மக்களவைத் தேர்தலுக்கு பின் எதிரிகளும்,  துரோகிகளும் இருக்க மாட்டார்கள் என அமைச்சர் தங்கமணி கூறினார்.  என்னைப் பொறுத்தவரை, நாமக்கல் தொகுதியில் உள்ள 14 லட்சம் வாக்காளர்களையும் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன். எதிரி,  துரோகி என்று யாரையும் நான் பார்ப்பதில்லை. என்னுடைய தந்தை வழிகாட்டுதலின்படி, ஒரு ரூபாயானாலும் அடுத்தவரிடம் எதிர்பார்க்கக்கூடாது என்பது தான். தேர்தலில் வெற்றி பெற்றால், என்னுடைய ஊதியம் முழுவதையும் மக்கள் நலனுக்காகவே செலவிடுவேன். அதில் இருந்து ஒரு காசு கூட என்னுடைய தேவைக்கு எடுக்க மாட்டேன். ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றுபவனாக என்றென்றும் இருப்பேன் என்றார்.
  இக்கூட்டத்தில், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் கே.பி.ராமலிங்கம், காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் ஷேக்நவீத் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க.,  ஐ.ஜே.கே., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai