Enable Javscript for better performance
நாமக்கல்: 3 மணி நேர போராட்டத்துக்கு பின் அ.தி.மு.க. வேட்பாளர் மனு ஏற்பு: தி.மு.க. புகாரால் நீடித்த ப- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல்: 3 மணி நேர போராட்டத்துக்கு பின் அ.தி.மு.க. வேட்பாளர் மனு ஏற்பு: தி.மு.க. புகாரால் நீடித்த பரபரப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மக்களவைத் தொகுதியில்,  புதன்கிழமை நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது,  தி.மு.க. அளித்த புகாரால் அ.தி.மு.க. வேட்பாளரின் மனு நிறுத்தி வைக்கப்பட்டது.  மூன்று மணி நேரப் போராட்டத்துக்கு பின் அவரது மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி ஒப்புதல் வழங்கினார்.
    நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 19 - இல் தொடங்கி 26 - ஆம் தேதி நிறைவு பெற்றது. அ.தி.மு.க. வேட்பாளர் டி.எல்.எஸ்.  பி.காளியப்பன், கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ், அ.ம.மு.க. வேட்பாளர் பி.பி.சாமிநாதன் உள்பட 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை காலை 11 மணிக்கு,  ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
        தேர்தல் அதிகாரியும்,  ஆட்சியருமான மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார்.  மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன்,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.  அதேபோல்,  அரசியல் கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.  ஒவ்வொரு மனுக்களாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு,  சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. 
    இந்த நிலையில்,  தி.மு.க. தலைமைக் கழக வழக்குரைஞர் இரா.நீலகண்டன், அ.தி.மு.க. வேட்பாளர் பி.காளியப்பன் மனுவையும், அவரது மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்த, அவரது மகன் ஆர்.கே.ராஜாவின் மனுவையும் நிராகரிக்க வேண்டும் என்ற மனுவை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அளித்தார்.  அந்த மனுவில்,  மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் அ.தி.மு.க. வேட்பாளரும்,  அவரது மகனும் ஒப்பந்ததாரர்களாக உள்ளனர்.  தேர்தல் ஆணையச் சட்டப்படி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுபவர் மத்திய அரசு சம்பந்தப்பட்ட ஒப்பந்தப் பணிகளில் ஈடுபடக் கூடாது என்ற விதி உள்ளது.  எனவே, இருவரின் வேட்பு மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
    இந்த புகார் மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு,  அ.தி.மு.க. வேட்பாளர் பி.காளியப்பனுக்கு  ஆதரவாக வேட்பு மனு பரிசீலனையில் பங்கேற்றோரிடம் ஆட்சியர் தெரிவித்தார்.  தொடர்ந்து,  வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.  இதில் ஆவணங்கள் சரிவரத் தாக்கல் செய்யப்படாததால்,  கபிலர்மலையைச் சேர்ந்த எஸ்.டி.செந்தில்குமார், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பி.மல்லிகா,   நாமக்கல் என்.கொசவம்பட்டியைச் சேர்ந்த எம்.சரவணன் ஆகிய மூவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக  மாவட்டத் தேர்தல் அலுவலர்  தெரிவித்தார்.
     வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவு பெற்ற நிலையில்,  அ.தி.மு.க., வேட்பாளர் மனு ஏற்கப்பட்டதா, இல்லையா? என்பதை தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இதனிடையே,  செய்தியாளர்களைச் சந்தித்த, தி.மு.க. தலைமைக் கழக வழக்குரைஞர் இரா.நீலகண்டன், கொ.ம.தே.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அ.தி.மு.க. வேட்பாளர் பி.காளியப்பன், அவரது மகன் ஆர்.கே.ராஜா ஆகியோர், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களின் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டிருப்பதாக ஆதாரங்களுடன் ஆட்சியரிடம் புகார் அளித்தோம்.  அவர் தற்போது அந்த மனுவை ஏற்காமல் நிறுத்தி வைத்துள்ளார் என்றார்.
    இதனால், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து, அங்கு வந்த அரசு வழக்குரைஞர் தனசேகரன், அ.தி.மு.க., வழக்குரைஞர் பி.மணிமேகலை ஆகியோர்,  தி.மு.க. அளித்த புகார் தொடர்பான விளக்கத்துக்கு பதில் அளிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.  சுமார் 3 மணி நேரம் வேட்பு மனுக்கள் தொடர்பான குழப்பம் நீடித்தது.
     தொடர்ந்து, பிற்பகல் 1.50 மணியளவில், தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.ஆசியா மரியத்தைச் சந்தித்த  அ.தி.மு.க. வழக்குரைஞர் பி.மணிமேகலை செய்தியாளர்களிடம் கூறியது:   தி.மு.க. அளித்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தனர்.  மத்திய அரசு எண்ணெய் நிறுவனத்தில் அ.தி.மு.க. வேட்பாளரோ, அவரது மகனோ நேரடியாக ஒப்பந்தப் பணிகளில் ஈடுபடவில்லை.  துணை ஒப்பந்தம் (சப்-காண்ட்ராக்ட்)  அடிப்படையிலேயே பணி மேற்கொண்டுள்ளனர் என்பதைத் தெரிவித்தோம்.  அதன்பின், தேர்தல் அலுவலரும் வேட்பு மனுவில் ஆட்சேபம் இல்லை. அ.தி.மு.க. வேட்பாளர் பி.காளியப்பன் மனுவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.  இனிமேல் எவ்வித பிரச்னையும் இல்லை என்றார். 
    இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொ.மதே.க. மாநில இளைஞரணிச் செயலர் சூரியமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது:  அ.தி.மு.க. வேட்பாளர் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது தொடர்பாக மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்டோம்.   அவர் தேர்தல் ஆணைய விதிகளின்படி ஏற்கப்பட்டுள்ளது.  நீங்கள் வேண்டுமெனில், நீதிமன்றத்தை நாடுங்கள் என்றார்.  நாங்கள், சென்னை உயர் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளோம் என்றார்.  மூன்று மணி நேரம் நீடித்த இப் பிரச்னையால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai