குழந்தைகள் விற்பனை விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இன்று விசாரணை தொடக்கம்

குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக,  ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட் பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார்

குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக,  ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட் பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வியாழக்கிழமை விசாரணையை தொடங்குகின்றனர்.
நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா (எ) அமுதவள்ளி(50). இவரது கணவர் ரவிச்சந்திரன் (53). நகரக் கூட்டுறவு வங்கியில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார்.  இந்த நிலையில் கடந்த மாதம் 25- ஆம் தேதி, கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்), குழந்தைகள் விற்பனை தொடர்பாக, தருமபுரியைச்  சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம்,  ஆண் குழந்தை ரூ.4.15 லட்சம், பெண் குழந்தை ரூ.2.70 லட்சம் என அமுதா விலை பேசுவது போன்ற ஒலிநாடா வெளியானது.
இது தொடர்பாக, ராசிபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வந்த அமுதாவை, காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தைகளை விற்பனை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.  இருப்பினும், எங்கெல்லாம் குழந்தைகள் விற்கப்பட்டது என்பது தொடர்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  அர.அருளரசு  உத்தரவின்பேரில், மூன்று தனிப்படை  அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதுவரையில் 14 குழந்தைகள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த குழந்தைகள் விற்பனை விவகாரத்தில், தலைவியாகச் செயல்பட்ட அமுதா, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை பவர்காடு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் முருகேசன்,  ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன்,  அருள்சாமி,  நிசா (எ)  ஹசீனா,  லீலா,   செல்வி உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்னையில்,  ராசிபுரம் நகராட்சியில் போலி பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு  ரூ.70 ஆயிரம் வழங்க வேண்டும் என வாடிக்கையாளரிடம் அமுதா கூறிய தகவலால்,  மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ரமேஷ்குமார் உத்தரவின்பேரில் 10 குழுக்கள், ராசிபுரம்,  கொல்லிமலை, சேந்தமங்கலம்,  நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் பிறப்புச் சான்றிதழ் வழங்கிய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம்  மட்டுமின்றி, பிற மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று இக்குழுக்கள் விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
காவல் துறை, சுகாதாரத் துறையினர் இவ்வழக்கை விசாரித்த நிலையில், இந்த வழக்கை திங்கள்கிழமை  சி.பி.சி.ஐ.டி.விசாரணைக்கு  மாற்றி காவல்துறைத் தலைவர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு கடிதம், சேலம் சுப்பிரமணிய நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்துள்ளது. இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. துணைக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், பெண் காவல் ஆய்வாளர்கள் பிருந்தா, சாரதா ஆகியோர் விசாரிக்க உள்ளனர்.
வியாழக்கிழமை (மே 2) ராசிபுரத்திலும், அதிக குழந்தைகள் விற்கப்பட்டதாகக் கூறப்படும் கொல்லிமலையிலும் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சிறையில் உள்ள அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன்,  கருமுட்டை விற்பனையாளரான பர்வீன் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
குழந்தைகள் விற்பனை வழக்கை விசாரித்து வந்த ராசிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயராகவன்,  காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோர், வழக்கு தொடர்பான ஆவணங்களை, ராசிபுரம் வரும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வசம் ஒப்படைக்கவுள்ளனர். அவர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு இதற்கான அறிக்கையை, காவல்துறைத் தலைவர் வசம் சமர்ப்பிப்பர்.  ஏற்கெனவே, எட்டு பேர் கைதாகியுள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி. விசாரணையை தொடங்கும்பட்சத்தில் மேலும் பலர் சிக்கக்கூடும் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com