கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை

கொல்லிமலை  ஆகாய கங்கை  நீர்வீழ்ச்சியில்  தண்ணீர் விழாததாலும்,  கற்கள் பெயர்ந்து விழுவதாலும்,

கொல்லிமலை  ஆகாய கங்கை  நீர்வீழ்ச்சியில்  தண்ணீர் விழாததாலும்,  கற்கள் பெயர்ந்து விழுவதாலும்,  அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. இங்குள்ள  ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரக்கூடியது.  ஜூலை,  ஆகஸ்ட் மாதங்களில்  இந்த அருவியில் பரவலாக தண்ணீர் விழும்.  தற்போது கோடைக்காலமாக இருப்பதால் அருவியில் அதிகளவில் தண்ணீர் கொட்டவில்லை.
அவ்வப்போது பெய்யும்  மழையால் ஓரளவு தண்ணீர் விழுகிறது.  சில தினங்களுக்கு முன்பு அருவியில் விழுந்த தண்ணீரில் குளிக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது சிறிய அளவிலான கற்கள் விழுந்தன. இதனால் அவர்கள் அச்சத்திற்குள்ளாகினர். இதையடுத்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லுவதற்கு  ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தடை விதித்தனர். அதன்பின், அருவியில் தண்ணீர் விழவில்லை. 
அறப்பளீஸ்வரர் கோயில் பகுதியில் இருந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல 1,300 படிகளை கடக்க வேண்டும். அவற்றைக் கடந்து செல்வோர் அருவியில் தண்ணீர் இல்லாதது கண்டு விரக்தியடைகின்றனர். கால்கடுக்க நடந்து வந்தும் அருவியில் குளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவர்களை வாட்டுகிறது. சுற்றுலாப் பயணிகளின் ஏமாற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு, அருவிப் பகுதிக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் கொல்லிமலை செல்வோர் குளுகுளு சீசனை அனுபவித்து விட்டு ஊர் திரும்புகின்றனர். 
கொல்லிமலை  ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியது:  ஆகாய கங்கை அருவி  பகுதிக்கு  முதியோர்கள் செல்வது கடினம்.  1,500 படிகளாக இருந்ததை,  1,300 படிகளாகக் குறைத்துள்ளோம்.  அருவியில் தண்ணீர் விழுந்தால்  சுற்றுலாப் பயணிகளை நம்பிக்கையுடன் அனுப்பி வைக்கலாம். தண்ணீர் இல்லாதபோது  வீணாக நடந்து சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அதனால் தான் தற்போது அருவிக்குச் செல்லத் தடை விதித்துள்ளோம். இன்னும் ஓரிரு மாதங்களில் சீசன் ஆரம்பித்துவிடும். அப்போது, அங்கு தண்ணீர் விழும்பட்சத்தில், அனைவரும் அனுமதிக்கப்படுவர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com