குழந்தைகள் விற்பனை தொடர்பாக தமிழகம் முழுவதும் மனித உரிமை ஆணையம் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலரும், உயிர்துளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வழக்குரைஞர் நல்வினை விஸ்வராஜூ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை பணியாளர் அமுதா என்பவர் குழந்தைகள் விற்பனை தொடர்பாக பேசிய உரையாடல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குழந்தைகள் வாங்கப்பட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
அதைத் தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாறுதல் செய்ய தமிழக காவல் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஏழ்மை நிலையில் உள்ள, படிப்பறிவற்ற , தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த அப்பாவிப் பெண்களிடம் ஆசை வார்த்தைக் காட்டி குழந்தைகளை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 95 ஆயிரம் வரையில் வாங்கி, மோசடியான பிறப்பு சான்றிதழ் தயார் செய்யப்பட்டு ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. போலி பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்ய பல லட்சம் வரை கைமாறி உள்ளதாக தெரிகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், மனிதனை மனிதன் விற்பனை செய்வதையும், மனிதனை மனிதன் வாங்குவதையும் தடை செய்துள்ளது. இந்தியாவில் தத்தெடுப்பதை ஒழுங்கு முறைப்படுத்தும் 1956 இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் பணம் பரிமாறுவதை சட்டவிரோதம் என்று அறிவித்து பணம் கொடுத்து தத்து எடுத்தால் அந்த தத்தெடுப்பு அறவே செல்லாது என்றும் அறிவித்துள்ளது.
குழந்தைகள் விற்பனை அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும்.
தத்தெடுத்தல் சட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஓட்டைகளினாலும், வழக்கு விசாரணையில் உள்ள குறைபாடுகளாலும் உண்மை வெளிவர வாய்ப்பு குறைவாக உள்ளது.
குழந்தைகள் விற்பனையில் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் தாழ்த்தப்பட்ட மலைவாழ் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். சம்பந்தப்பட்ட குழந்தைகள் பெருமளவில் பெண் குழந்தைகளாக உள்ளனர். சமூக பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக குழந்தைகளை விற்பனை செய்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள குழந்தைகள் விற்பனை தொடர்பான புகார்கள் அனைத்தும் மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு பெண்கள் ஆணையம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் ஆகியவற்றின் மேற்பார்வையிலும் கண்காணிப்பிலும் வழிகாட்டுதலிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.