நாமக்கல்லில் ஒன்பது மையங்களில் 5,283 பேர் நீட் தேர்வு எழுதினர்

நாமக்கல்லில்  ஒன்பது மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட்  தேர்வை, 5,283  மாணவ, மாணவியர் எழுதினர். பலத்த சோதனைக்கு பின்னர் மாணவ, மாணவியர் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.


நாமக்கல்லில்  ஒன்பது மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட்  தேர்வை, 5,283  மாணவ, மாணவியர் எழுதினர். பலத்த சோதனைக்கு பின்னர் மாணவ, மாணவியர் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, நீட் தேர்வு எழுதுவது கட்டாயம் என்பதால், தமிழகம் முழுவதும் 188 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வை 1.35 லட்சம் பேர் எழுதினர்.  கடந்த ஆண்டு வரை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) நடத்திய இந்தத்  தேர்வை, நிகழாண்டில் தேசிய தேர்வு முகமையானது நடத்தியது.
நாமக்கல் மாவட்டத்தில், ஒன்பது மையங்களில் நடந்த இத் தேர்வை 5,283 மாணவ,  மாணவியர் எழுதினர். நீட் தேர்வில் பங்கேற்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவியர் நாமக்கல்லுக்கு வந்திருந்தனர்.  விடுதிகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்த அவர்கள், காலை 10 மணிக்கெல்லாம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்கள் முன்பாக பெற்றோருடன் குழுமினர்.
காலை 11.30 மணிக்கு,  தேர்வு மையங்களில்  நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், மாணவ, மாணவியர் ஒவ்வொருவரையும் தேர்வுக்கான அனுமதி  அடையாள அட்டையைச் சரிபார்த்தும்,  தேசிய தேர்வு முகமை விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி வந்துள்ளனரா என சோதனை செய்தும் தேர்வறைக்குள் அனுப்பினர்.  கடந்த முறை தேவையற்ற குழப்பம், மன உளைச்சலுக்கு ஆளான தேர்வர்கள் இம் முறை எவ்வித பிரச்னையுமின்றி தேர்வு எழுதச் சென்றனர்.  காலை 11.30 முதல் 1.30 மணி வரையிலேயே அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு  நிறைவடைந்தது.
நீட் தேர்வை,  ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் 354 மாணவர்கள், 546 மாணவியர் என மொத்தம் 900 பேரும்,  முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில், 273 மாணவர்கள், 447 மாணவியர் என 720 பேரும், செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் 321 மாணவர்கள், 399 மாணவியர் என 720 பேரும்,  நாமக்கல் தி நவோதயா பள்ளியில் 219 மாணவர்கள், 381 மாணவியர் என 600 பேரும் எழுதினர்.
அதேபோல், ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 240 மாணவர்கள், 360 மாணவியர் என 600 பேரும், நேஷனல் பப்ளிக் பள்ளியில் 253 மாணவர்கள்,  347 மாணவியர் என 600 பேரும், பி.ஜி.பி. பாலிடெக்னிக் கல்லூரியில் 184 மாணவர்கள், 236 மாணவியர் என 420 பேரும், ஸ்பெக்ட்ரம் லைப் பள்ளியில் 109 மாணவர்கள், 134 மாணவியர் என 243 பேரும், திருச்செங்கோடு விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 210 மாணவர்கள், 270 மாணவியர் என 480 பேரும், மொத்தம் 2,163 மாணவர்கள், 3,120 மாணவியர் என  5,283 பேர் எழுதினர்.
ஒவ்வொரு  மையம் முன்பாகவும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  தேர்வு முடியும் வரையில்  தேர்வு மையங்கள் முன்பாக பெற்றோர் காத்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com