Enable Javscript for better performance
நாமக்கல்லில் மாதிரி வாக்குப்பதிவு குளறுபடி: முகவர்கள் கேள்வி எழுப்பினால் ஒப்புகைச்சீட்டை எண்ண முடிவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நாமக்கல்லில் மாதிரி வாக்குப்பதிவு குளறுபடி: முகவர்கள் கேள்வி எழுப்பினால் ஒப்புகைச்சீட்டை எண்ண முடிவு

    By DIN  |   Published On : 10th May 2019 09:27 AM  |   Last Updated : 10th May 2019 09:27 AM  |  அ+அ அ-  |  

    மாதிரி வாக்குப்பதிவை அழிக்காததால் நிகழ்ந்த குளறுபடி தொடர்பாக பிரச்னை எழக்கூடாது என்பதால், வாக்கு எண்ணிக்கையின்போது ஒப்புகைச்சீட்டை எண்ணுவதற்கு தேர்தல் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
    நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலின்போது, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், அனைத்து மகளிர் வாக்குச்சாவடி ஒன்றும் இடம் பெற்றிருந்தது. இங்கு பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். இந்த சாவடியில் மொத்தம் 641 வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். தேர்தல் நாளான ஏப்ரல் 18-ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., முகவர்கள், மாதிரி வாக்குப்பதிவாக மின்னணு இயந்திரத்தில் மொத்தம் 51 வாக்குகளைப் பதிவு செய்தனர். இவை முடிந்ததும், மாதிரி வாக்குகளை அங்கு பணியில் இருந்த தலைமை வாக்குச்சாவடி அலுவலர் இயந்திரத்தில் இருந்து அழித்திருக்க வேண்டும்.  ஆனால், அந்த மாதிரி வாக்குகளை அழிக்காமலே, காலை 7 மணிக்கு முறையான வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. நாமக்கல்  சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 21 பேர் வாக்களித்துச் சென்றனர்.
    அப்போது, தி.மு.க., முகவர் வடிவேல் என்பவர், மொத்தம் பதிவான வாக்குகள் எவ்வளவு? என கேள்வி எழுப்பினார்.  அதற்கு தலைமை வாக்குச்சாவடி அலுவலர், 72 என குறிப்பிட்டார்.  ஆனால், வாக்காளர் பட்டியலில் பதிவாகி இருப்பதோ வெறும் 21 மட்டுமே.  இதனால் குழப்பமடைந்த அவர், தலைமை வாக்குச்சாவடி அலுவலரிடம் முறையிட்டு, வாக்குப்பதிவை நிறுத்துமாறு கூறினார்.  அதைதொடர்ந்து, நாமக்கல் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார்-ஆட்சியருமான சு.கிராந்திகுமார் பதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனிடையே குளறுபடி தொடர்பாக விசாரிக்க சார்-ஆட்சியரால் அனுப்பப்பட்ட மண்டல அலுவலர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான 72 வாக்குகளையும் அழித்துவிட்டதாகத் தெரிகிறது.  ஏற்கெனவே 21 வாக்குகள் இயந்திரத்தில் பதிவாகியிருந்ததால்,  அந்த வாக்குகள் தங்களுக்கு வேண்டும் என முகவர்கள் வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து,  வாக்குப்பதிவு செய்து வீடு திரும்பிய 21 வாக்காளர்களையும் தேடி கண்டுபிடித்து, கையில் அடையாள மை-யின்றி மீண்டும் வாக்களிக்கச் செய்தனர்.
    தமிழகம் முழுவதும் 13 வாக்குச்சாவடிகளில் வரும் 19-ஆம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.  மேலும், மாதிரி வாக்குப்பதிவு குளறுபடி நிகழ்ந்த 46 இடங்களில் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவானவற்றை, வாக்கு எண்ணிக்கையின்போது எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  இதில், நாமக்கல் தெற்கு பள்ளி மகளிர் சாவடி இல்லையென அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும்,  வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சி முகவர்கள் வலியுறுத்தினால், அதற்கு தயாராக இருப்பதாக நாமக்கல் தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
    இதுதொடர்பாக, தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியது;  நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின்போது, நாமக்கல் தெற்குப் பள்ளி வாக்குச்சாவடியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக, முகவர்கள் யாராவது கேள்வி எழுப்பினால், அப்போது மாதிரி வாக்குகள் இவ்வளவு, அதன்பின் பதிவான வாக்குகள் இவ்வளவு என எண்ணி அவற்றை காண்பிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். 
    அங்குள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்தார்களா எனத் தெரியவில்லை. எவ்வளவு வாக்குகள் பதிவானதோ அதை ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட்டு, சம்பந்தப்பட்ட முகவர்களிடம் விளக்கிக் கூறுவோம். தேர்தல் ஆணையம் கூறியிருப்பதும் அதுபோலத் தான். எங்களுக்கு இதுவரை ஒப்புகைச்சீட்டை எண்ணிக் காட்டுமாறு தேர்தல் ஆணையத்திடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை என்றார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp