லாரி மீது கார் மோதியதில் கார் ஓட்டுநர் பலி
By DIN | Published On : 15th May 2019 08:30 AM | Last Updated : 15th May 2019 08:30 AM | அ+அ அ- |

குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து பெங்களூரு நோக்கி செவ்வாய்க்கிழமை ஒரு கார் சென்றது. காரை கோவையைச் சேர்ந்த ஓட்டுநர் தனபால் (46) ஓட்டிச் சென்றார். குமாரபாளையத்தை அடுத்த நேரு நகர் பேருந்து நிறுத்தம் அருகே கார் சென்ற போது, எதிர்பாராமல் முன்பக்க டயர் வெடித்தது.
இதனால் நிலைதடுமாறிய கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்பைத் தாண்டி எதிர்புறத்துக்குச் சென்றது. அப்போது, சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற லாரியின் முன்பகுதியில் கார் மோதியது. இதில், காரின் முன்பகுதி லாரியில் சிக்கி சேதமடைந்ததில் ஓட்டுநர் தனபால் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த குமாரபாளையம் போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் நீண்டநேரம் போராடி தனபாலின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.