நாமக்கல்லில் ஆலங்கட்டி மழை
By DIN | Published On : 18th May 2019 09:00 AM | Last Updated : 18th May 2019 09:00 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை பிற்பகல் காற்று, இடி, மின்னனுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பத்தின் பிடியில் இருந்து மக்கள் நிம்மதியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மே 4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் பகலில் வெயில் கொளுத்தியபோதும், பிற்பகலில் வானம் சற்று மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும். இருப்பினும் வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூர் உள்ளிட்ட இடங்களில் பிற்பகலுக்கு மேல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலாக வெயில் கொளுத்திய நிலையில், பிற்பகல் 4 மணிக்கு மேல் வானத்தில் மேகங்கள் திரண்டு இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை கொட்டியது. மேலும், சிறியளவில் ஆலங்கட்டி களும் விழுந்தன.
அரை மணி நேரம் விடாமல் பெய்த இந்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழை மற்றும் காற்றால் ஆங்காங்கே சிறிய அளவிலான மரங்கள் முறிந்து விழுந்தன. கடந்த இரு வாரங்களாக வெயில் கொடுமையால் தவித்த மக்கள், பலத்த மழை பெய்ததைக் கண்டு நிம்மதியடைந்தனர். மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடைக்கால வேளாண்மையை மேற்கொள்ள வெள்ளிக்கிழமை பெய்த மழை சாதகமாக இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.