ஜூன் 21- இல் மின் பயிற்சியாளர் நியமனத்துக்கு நேர்காணல்
By DIN | Published On : 27th May 2019 09:47 AM | Last Updated : 27th May 2019 09:47 AM | அ+அ அ- |

நாமக்கல் அருகே ஊராட்சிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் பயிற்சியாளர் நியமனத்துக்கான நேர்காணல் நடைபெற இருப்பதாக, மேற்பார்வைப் பொறியாளர் சித்திக் பாத்திமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஈரோடு மின் உற்பத்தி வட்டத்துக்குள்பட்ட, நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களில், ஓராண்டு தொழிற்பயிற்சிக்காக, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பொருத்துநர் படித்தவர்கள் மூவர், மின்னாளர் படிப்பு படித்தவர்கள் மூவர், வயர்மேன் படிப்பு படித்தவர்கள் நான்கு பேர் என மொத்தம் 10 பேர் பயிற்சியாளர் பணிக்கு நியமனம் செய்ய உள்ளனர்.
இதற்கான நேர்காணல், ஜூன் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு, நாமக்கல் அருகே ஊராட்சிக் கோட்டை அலுவலகத்தில் மேற்பார்வைப் பொறியாளர் முன்னிலையில் நடைபெறுகிறது. தகுதியுடையோர் கல்வி, ஜாதி மற்றும் மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அட்டை, மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.