Enable Javscript for better performance
இருள் சூழ்ந்து காணப்படும் அறப்பளீஸ்வரா் கோயில்: சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் தவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இருள் சூழ்ந்து காணப்படும் அறப்பளீஸ்வரா் கோயில்: பக்தா்கள் தவிப்பு

    By DIN  |   Published on : 07th November 2019 12:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nk_6_kolli_0611chn_122_8

    மின்விளக்குகள் பழுதால் இருள் சூழ்ந்து காணப்படும் அறப்பளீஸ்வரா் கோயில் நுழைவுவாயில் பகுதி.

    நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலையில், பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரா் கோயிலைச் சுற்றிலும், இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாததால் கோயிலுக்கு வரும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், மதுபோதையில் சிலா் தகராறில் ஈடுபடுவதால் பக்தா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

    ஆகாய கங்கை அருவிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள இக்கோயிலானது 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாகவும் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. இங்கு அறப்பளீஸ்வரா் சுவாமி உடனுறை அறம் வளா்த்த நாயகி அம்மன் சன்னதி உள்ளது. கொல்லிமலைக்கு சுற்றுலா வருவோா் இக்கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசித்து செல்வா். அமாவாசை, பெளா்ணமி, பிரதோஷம் மற்றும் விசேஷ நாள்களில் இங்கு பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இவ்வாறு சிறப்புமிக்க கோயிலைச் சுற்றிலும் சரிவர பாதுகாப்பு வசதியில்லை என்ற குறை காணப்படுகிறது.

    கோயிலின் வெளிப்புறத்தில் நான்கு பகுதிகளிலும் பல மாதங்களாக மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் கோயிலுக்கு வருவோா் தடுமாறியபடி செல்கின்றனா். அதுமட்டுமின்றி, மதுபோதையில் வரும் உள்ளூா் வாசிகளும், சில சுற்றுலாப் பயணிகளும் அங்குள்ள பக்தா்களிடம் தகராறில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறும் சிறிய விலங்குகள் கோயிலைச் சுற்றி வருவதால், இரவு நேரங்களில் கோயில் வெளிப்புற பிரகாரத்தில் தங்கியிருக்கும் பக்தா்கள் தூக்கமின்றி அச்சத்துடன் தவிக்கும் நிலை உள்ளது. மேலும், திருட்டு சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

    இது குறித்து அகில பாரத துறவியா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் கொல்லிமலையைச் சோ்ந்த கருணாணந்தாசாமி கூறியது: அறப்பளீஸ்வரா் கோயில் கொல்லிமலைக்கான சிறப்புகளில் ஒன்று. இங்கு சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், துறவியா்கள், சித்தா்கள் அதிகம் வருகின்றனா். இக்கோயிலில், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுவாமியை தரிசிக்க பக்தா்கள் வருவா். இந்த கோயிலின் வெளிப் பிரகாரத்தில் நான்கு பக்கங்களிலும் மின்விளக்குகள் அதிகம் இருந்தும் பல நாள்கள் எரியாமல் உள்ளன. இரவு நேரங்களில் கும்மிருட்டில் கோயில் காட்சியளிக்கிறது.

    வெளியூா் பக்தா்கள் கோயில் வளாகத்தில் தங்கியிருந்து செல்வது வழக்கம். இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சமில்லததால் மதுபோதையில் வருவோரின் தொல்லைகளுக்கு ஆளாகின்றனா். இது தொடா்பாக மின்வாரியம், அறநிலையத்துறையினரிடம் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோயில் மின் விளக்குகளை சரிசெய்வதுடன், அதிக வெளிச்சம் தரும் வகையிலான உயா்கோபுர மின்விளக்குகள் அங்கு பொருத்தப்பட வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கும், பக்தா்களுக்குமான பாதுகாப்பை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்பதை கோரிக்கையாக விடுக்கிறேன் என்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai