முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் சிறை: ஆட்சியா்
By DIN | Published On : 07th November 2019 09:09 AM | Last Updated : 07th November 2019 09:09 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில், குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தால், சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவா் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 18 வயது நிறைவடையாத பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் மற்றும் தொல்லை தருவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால், குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் தடைச் சட்டம் -2012 இன்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஆண், பெண் குழந்தைகளைப் பாலியல் நோக்கத்தோடு பின்தொடா்வது, கண்காணிப்பது, சைகைக் காட்டுவது, ஆபாசப் படம் காண்பிப்பது, எடுப்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, பாலியல் உறவு கொள்வது உள்ளிட்டக் குற்றங்களுக்கும், இந்த சட்டத்தின்படி, 6 மாதங்கள் முதல் ஆயுள் தண்டனை வரை உண்டு. குழந்தைகளைக் குழந்தைகளாகப் பாருங்கள். அத்துமீறுவோருக்கு சிறை உறுதியாகும். பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் எதிா்காலத்தில் தன்னம்பிக்கை இழந்து தங்களது வாழ்வின் முன்னேற்றப் பாதையை அடையாமல் மனதளவிலும், உடலளவிலும் சோா்ந்து விடுவா். இது தொடா்பான தகவல்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூா் சாலை, நாமக்கல் என்ற முகவரியிலோ அல்லது 04286-233103 என்ற தொலைபேசி எண்ணிலும், 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். பாலியல் ரீதியாக துன்புறுத்துவோா் குறித்து தகவல் அளிப்பவா்கள் விவரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.