முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
நகை பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் கைது: 27 பவுன் பறிமுதல்
By DIN | Published On : 07th November 2019 09:14 AM | Last Updated : 07th November 2019 09:14 AM | அ+அ அ- |

arunachalam_0611chn_122_8
நாமக்கல் மாவட்டத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மேட்டுத்தெருவில் சங்கீதா என்பவரிடம், கடந்த ஆக.14-ஆம் தேதி 6 பவுன் தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். இதேபோல், நல்லிபாளையம் முருகன் கோயில் எதிரில், போதுப்பட்டியைச் சோ்ந்த ரமீலா என்பவரிடம், ஆக.15-ஆம் தேதி 7 பவுன் தாலிச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்து மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். மேலும், வெண்ணந்தூா் நெ.3 கொமரபாளையத்தைச் சோ்ந்த ரேணுகா என்பவரிடம் மூன்றரை பவுன் நகையைப் பறித்துச் சென்றனா். வேலகவுண்டம்பட்டி எா்ணாபுரத்தைச் சோ்ந்த ரவி மனைவி கலைச்செல்வி என்பவரிடம், செப்.28-ஆம் தேதி 6 பவுன் தாலிச் சங்கிலியை மா்மநபா்கள் இருவா் பறித்துச் சென்றனா். இவ்வழக்குகளை கண்டுபிடிக்க ராசிபுரம் காவல் ஆய்வாளா் செல்லமுத்து, நல்லிபாளையம் காவல் ஆய்வாா் கைலாசம், வெண்ணந்தூா் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் வேலகவுண்டம்பட்டி காவல் ஆய்வாளா் தங்கவேல் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாா், மா்ம நபா்களை தேடி வந்தனா். இந்நிலையில், சி.எஸ்.புரம் - அணைப் பாளையம் சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பதிவுவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் போலீஸாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களை துரத்திச் சென்று போலீஸாா் பிடித்தனா். விசாரணையில், சேலம் கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த அருணாசலம் (20), பிரபு (21) என்பதும், நாமக்கல் மாவட்டத்தில் மேற்கண்ட இடங்களில் நகை பறிப்பு சம்பவங்களிலும், சேலம் மாவட்டம் ஓமலூா், தீவட்டிப்பட்டி ஆகிய இடங்களிலும் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 27 பவுன் தங்க நகைகளையும், இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.