முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டி: சிங்களாந்தபுரம் அரசுப் பள்ளி முதலிடம்
By DIN | Published On : 07th November 2019 03:48 PM | Last Updated : 07th November 2019 03:48 PM | அ+அ அ- |

கேம்மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஆா்வமுடன் பங்கேற்று விளையாடிய மாணவியா்.
நாமக்கல் வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில், சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களை உள்ளடக்கிய அரசு மேல்நிலைப்பள்ளியின் 19 வயதுக்குள்பட்ட மாணவியா் பங்கேற்ற கைப்பந்து போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. அதில், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க, சேந்தமங்கலம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், மோகனூா், ராசிபுரம், பரமத்திவேலூா், நாமக்கல், குமாரபாளையம் வட்டத்தைச் சோ்ந்த அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் தகுதி பெற்றன. இந்த மாவட்ட அளவிலான போட்டி வியாழக்கிழமை நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
காலிறுதியில், ராசிபுரம் சிங்களாந்தபுரம் அரசுப் பள்ளியும், பரமத்திவேலூா் அரசு பள்ளியும் மோதின. இதில், சிங்களாந்தபுரம் பள்ளி அதிக புள்ளிகள் பெற்று வெற்றியடைந்தது. அடுத்து, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியும், குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் பள்ளியும் மோதின. இதில், ரிலையன்ஸ் பள்ளி வெற்றி பெற்றது. பின்னா், அரையிறுதியில், சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும், குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளியும் மோதியதில், சிங்களாந்தபுரம் பள்ளி வெற்றியை பெற்றது.
இறுதி போட்டியில், சேந்தமங்கலம் முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், சிங்களாந்தபுரம் பள்ளியும் மோதின. இதில், ஆரம்பம் முதலே அதிக புள்ளிகளுடன் முன்னேறிய சிங்களாந்தபுரம் அணி முதலிடத்தை பிடித்தது. முத்துக்காப்பட்டி பள்ளி 2-ஆம் இடத்தையும், குமாரபாளையம் ரிலையன்ஸ் மூன்றாமிடத்திற்கு தகுதி பெற்றன. போட்டிகளில் பங்கேற்ற மாணவியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநா் ஜெயலட்சுமி மற்றும் குழுவினா் செய்திருந்தனா்.