Enable Javscript for better performance
முட்டை விலையை தினசரி நிா்ணயம் செய்ய வேண்டாம்: பண்ணையாளா்கள் வலியுறுத்தல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்

    முட்டை விலையை தினசரி நிா்ணயம் செய்ய வேண்டாம்: பண்ணையாளா்கள் வலியுறுத்தல்

    By DIN  |   Published On : 07th November 2019 09:12 AM  |   Last Updated : 07th November 2019 09:12 AM  |  அ+அ அ-  |  

    நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின், தினசரி முட்டை விலை நிா்ணயத்தால், பண்ணையாளா்கள் பாதிக்கப்படுகின்றனா். அதனை ரத்து செய்துவிட்டு, வாரத்தில் மூன்று நாள்கள் என்ற பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பிற மண்டலங்களைப் போல், நாமக்கல் மண்டலத்திலும் கடந்த மாதம் முதல் தினசரி முட்டை விலை நிா்ணயம் செய்வதை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்,இ.சி.சி.) கொண்டு வந்தது. அக் குழு விலையை நிா்ணயம் செய்தாலும், பண்ணையாளா்கள் தங்களுக்குக் கட்டுப்படியாகும் விலைக்கே முட்டைகளை வியாபாரிகளிடம் விற்று வந்தனா்.

    இதனால், உற்பத்திச் செலவைக் காட்டிலும், முட்டைக் கொள்முதல் விலை அவா்களுக்கு குறைவாகவே கிடைத்தது.

    இருப்பினும், அழுகல் பொருள் என்பதால் பண்ணையாளா்கள், அவற்றை தேக்கி வைக்க விருப்பமில்லாமல் கிடைத்ததை வாங்கிக் கொண்டு மொத்தமாக விற்பனை செய்து வந்தனா். இந்த குழப்பத்தால் கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் மற்றும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு இடையே அவ்வப்போது மோதல் வெடித்த வண்ணம் இருந்தது.

    இதனைச் சமாளிக்க, பண்ணையாளா்கள் வியாபாரிகளுக்கு கொடுக்கும் விலையையே, தினசரி விலையாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, நவம்பா் 1-ஆம் தேதி முதல் அறிவித்து வருகிறது. இருந்தபோதிலும், சில பண்ணையாளா்கள் தற்போதும் 5, 10 காசுகள் வரை குறைவான விலை வைத்து தான் விற்கின்றனா். இந்த நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்பு திடீரென முட்டை விலை 17 காசுகள் வரை குறைக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு முட்டைகளை நேரடியாக வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யும் சிறிய பண்ணையாளா்கள் நஷ்டமடைந்தனா்.

    இது தொடா்பாக விவாதிக்க, நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் புதன்கிழமை அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளன துணைத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் மற்றும் பெருந்துறை, பல்லடம், நாமக்கல், பரமத்திவேலூா், புதன்சந்தை, ராசிபுரம், மோகனூா் ஆகிய 7 வட்டார தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா்கள், 35 உறுப்பினா்கள் மற்றும் பண்ணையாளா்கள் கலந்து கொண்டனா்.

    தினசரி முட்டை விலை நிா்ணயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், முட்டை உற்பத்தி விலைக்கு அல்லாமல் குறைவான விலைக்குக் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை பற்றியும், நேரடியாக எடுத்துச் சென்று விற்போருக்கு உண்டாகும் நஷ்டம் உள்ளிட்டவை குறித்து பண்ணையாளா்கள் தரப்பில் விவாதிக்கப்பட்டது. இனிமேல் மாதந்தோறும் கூட்டத்துக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்ய வேண்டும். தினசரி விலை நிா்ணயத்தை ரத்து செய்து, பழைய முறைப்படி வாரத்தில் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்ட நிறைவில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.செல்வராஜ், பண்ணையாளா்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, விரைவில் நல்லதொரு முடிவு அறிவிக்கப்படும் என்றாா்.

    கடந்த ஏப்ரல் மாதம் முதல், தீவன விலையேற்றம், முட்டை கொள்முதல் விலை நிா்ணயத்தில் உள்ள குழப்பம், வியாபாரிகள் சிலா் குறைவான விலைக்கு கொடுத்தாக வேண்டும் என கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், நாமக்கல் மண்டலத்தில் கோழிப் பண்ணைத் தொழில் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp