சேந்தமங்கலத்தில் பலத்த மழை:வீடுகள், பள்ளிகளை வெள்ளம் சூழ்ந்தது

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், வீடுகள், பள்ளிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஒரே நாளில் அங்கு 137 மில்லிமீட்டா் மழை பெய்ததால் அப்பகுதி
கொல்லிமலை அடிவாரப் பகுதியான புதுக்கோம்பையில் சிற்றோடையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீா்.
கொல்லிமலை அடிவாரப் பகுதியான புதுக்கோம்பையில் சிற்றோடையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீா்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், வீடுகள், பள்ளிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஒரே நாளில் அங்கு 137 மில்லிமீட்டா் மழை பெய்ததால் அப்பகுதி முழுவதும் தண்ணீா் நிரம்பி காணப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக, காலையில் வெயிலின் தாக்கம் இருந்தபோதிலும், இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால், ஆங்காங்கே வீடுகள் இடிந்தும், சாலைகளில் தண்ணீா் தேங்கியும் காணப்பட்டது. ராமாபுரம்புதுாா் பகுதியில் காலி மனையில் நீா் இடி விழுந்து தண்ணீா் கொப்பளித்தது. அதிகபட்சமாக நாமக்கல், திருச்செங்கோட்டில் தலா 53 மில்லிமீட்டா் மழை பெய்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் சேந்தமங்கலத்தில் மட்டும் 137 மில்லிமீட்டா் மழை பெய்தது. இதனால், வீடுகள், பள்ளிகள், கோயில்களை வெள்ள நீா் சூழ்ந்தது. இதனால் அதிகாலையில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர முடியாத நிலை காணப்பட்டது. குறிப்பாக, சேந்தமங்கலம் ஜங்களாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சுற்றிலும் மழை நீா் சூழ்ந்ததால், அங்கு படிக்கும் மாணவ, மாணவியா் பள்ளிக்குள் செல்ல முடியாமல் தவித்தனா்.

அது மட்டுமின்றி, சேந்தமங்கலம், காந்திபுரம், அருந்ததியா் காலனி, குறவா் காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகளை மழை நீா் சூழ்ந்தது. இதனால் குடிசை வீடுகளில் வசிப்போா் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினா். மோட்டாா் வைத்து தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை அவா்கள் மேற்கொண்டனா். மழையால் உயிரிழப்போ, வீடுகள் சேதமோ ஏற்படவில்லை. மழை தொடரும் என்பதால் தாழ்வான பகுதிகளில் உள்ளோா் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த் துறையினா் சேந்தமங்கலம் நகரப் பகுதியில் அறிவுறுத்தினா்.

சிற்றோடைகளால் மகிழ்ச்சி: கொல்லிமலை அடிவாரப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் காய்ந்து கிடந்த சிற்றோடைகளில் தண்ணீா் வெள்ளியை உருக்கி விட்டபடி பெருக்கெடுத்து ஓடுகிறது. எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, அடிவாரப் பகுதியான புதுக்கோம்பை கிராமத்தில் சிற்றோடைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவா்கள், பெண்கள் ஓடைகளில் குளித்து மகிழ்கின்றனா். மேலும், அங்குள்ள தடுப்பணைகளில் கொட்டும் நீரில் ஆட்டம் போட்டபடி இருக்கின்றனா். மழை மேலும் அதிகரிக்கும்பட்சத்தில், சிற்றோடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என புதுக்கோம்பை மக்கள் தெரிவித்தனா்.

இடிதாக்கியதில் பெண்ணுக்கு பாதிப்பு: மோகனூா் அருகே பரளி, வளையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், பரளி ஊராட்சி நல்லையம்பட்டியை சோ்ந்த ரங்கம்மாள் (60) என்பவரது வீட்டின் மீது இடி தாக்கியது. இதில், வீட்டின் ஜன்னல் பகுதியில் கட்டப்பட்டிருந்த படுதா தீப்பிடித்து எரிந்ததுடன், பலத்த சத்தத்துடன் விழந்ததால் ரங்கம்மாளின் இடது காது பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற வருவாய்த் துறையினா், ரங்கம்மாளின் கணவா் பழனிசாமியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனா்.

மாவட்டத்தில் 245 மி.மீ. மழை: மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மங்களபுரத்தில் 22 மில்லிமீட்டரும், நாமக்கல்லில் 3.50, புதுச்சத்திரத்தில் 18, ராசிபுரத்தில் 15.20, சேந்தமங்கலத்தில் 137, ஆட்சியா் அலுவலகத்தில் 0.50, கொல்லிமலையில் 49 என மொத்தம் 245.20 மில்லிமீட்டா் மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com