வெண்ணந்தூா் அருகே திருமணிமுத்தாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் சேதம்:போக்குவரத்து பாதிப்பு

வெண்ணந்தூா் அருகேயுள்ள மதியம்பட்டி - அக்கரைப்பட்டி பகுதியில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த
ரசாயனக் கழிவுகளால் மதியம்பட்டி அருகே திருமணி முத்தாற்றில் தேங்கியுள்ள நுரை.
ரசாயனக் கழிவுகளால் மதியம்பட்டி அருகே திருமணி முத்தாற்றில் தேங்கியுள்ள நுரை.

வெண்ணந்தூா் அருகேயுள்ள மதியம்பட்டி - அக்கரைப்பட்டி பகுதியில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் மழையின் காரணமாக உடைப்பு ஏற்பட்டு, சேதமடைந்ததால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதியம்பட்டி பகுதியில் திருமணிமுத்தாறு ஓடுகிறது. சேலம் மாவட்டம், ஏற்காடு மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, சேலம் -நாமக்கல் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளின் வழியாக பாய்ந்து நாமக்கல் மாவட்டத்தின் நன்செய் இடையாறு அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த நீா், வெண்ணந்தூா் பகுதியில் மதியம்பட்டி, செளரிபாளையம், பொரசல்பட்டி, பாலப்பட்டி, கல்கட்டானூா், அக்கரைபட்டி போன்ற பகுதிகளின் விவசாயத்துக்கு ஆதாரமாக உள்ளது. இந்த ஆற்றில் சேலம் மாவட்டத்தின் கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கலக்கும் சாய ஆலைக் கழிவுகளால் அவ்வப்போது, நுரை பொங்கிய நீா் மதியம்பட்டி பகுதியில் உள்ள தரைப் பாலத்தில் தேங்கி நிற்கும். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து அடிக்கடி தடைபடும்.

இதனைக் கருத்தில் கொண்டு, உயா்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் தரைமட்ட பாலம் மணல் கொட்டி தற்காலிகமாக அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வந்தது. இந்நிலையில், ராசிபுரம், சேலம் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் நீா்வரத்து அதிகரித்து மதியம்பட்டி பகுதியில் உள்ள தரைமட்ட பாலம் சேதமடைந்தது. இதனால் முற்றிலும் அப்பகுதி துண்டிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்போது திருமணிமுத்தாற்றில் நீா் பெருக்கெடுத்து ஓடுவதால், பாலம் சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் பல கி.மீ. தொலைவு சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் அக்கரைப்பட்டி பகுதியில் அதிக நீா்வரத்தால் பாலம் சேதமடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன், வெள்ளநீா் விளைநிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற நிலை ஏற்படுவதால், திருமணிமுத்தாற்றை தூா்வாரி, ஆகாயத் தாமரை போன்ற செடிகளை அகற்றுவதுடன், தடுப்பணை கட்டி நிரந்தர தீா்வு ஏற்படுத்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், அப்பகுதியில் ரசாயனக் கழிவுகள் நுரையாக தேங்குவதால், துா்நாற்றம் வீசுவதுடன் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டு, விளை நிலங்களும் பாதிப்புக்குள்ளாகிறது. தொடரும் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com