திருச்செங்கோட்டில் 18 மாரியம்மன் கோயில்களில் திருவிழா நிறைவு

திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் அமைந்துள்ள 18 மாரியம்மன் கோயில்களின் திருவிழா சென்ற
திருச்செங்கோட்டில் மாரியம்மன் கோயில்களில் நடைபெற்ற கம்பம் விடுதல் ஊா்வலம்.
திருச்செங்கோட்டில் மாரியம்மன் கோயில்களில் நடைபெற்ற கம்பம் விடுதல் ஊா்வலம்.

திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் அமைந்துள்ள 18 மாரியம்மன் கோயில்களின் திருவிழா சென்ற வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி முளைப்பாரி விடுதல், கம்பம் விடுதல் நிகழ்வுடன் திருவிழாக்கள் நிறைவு பெற்றன.

திருச்செங்கோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், முத்துமாரியம்மன், கருமாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன், மண்ணிக்குட்டை மாரியம்மன் உள்ளிட்ட 18 மாரியம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் ஒரு வார காலம் திருவிழாக்கள் பூச்சாட்டுதலுடன் தொடங்கி கம்பம் விடுதல் முளைப்பாரி விடுதல் போன்ற நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெறுவது வழக்கம்.

அந்த வகையில், சென்ற புதன்கிழமை தொடங்கியது. திருவிழாவில் அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஒரு வார காலம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோயில்களில் அக்னிச் சட்டி எடுத்தல், அடி விழுந்து வணங்குதல், அலகு குத்துதல் மாறுவேடம் அணிதல், மாலை அணிதல், முடி காணிக்கை போன்ற நோ்த்திக் கடன்களை பக்தா்கள் செய்தனா்.

மேலும் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா். மாரியம்மன் சுவாமிகளின் ஊா்வலம் நான்கு ரத வீதிகளில் சுற்றிவந்தது. அம்மன் திருவீதி உலாவின்போது தமிழா்களின் பாரம்பரிய கலையான சிலம்பம், வாள் வீச்சு, சுருள் வீச்சு, நெருப்புப் பந்தம் சுற்றுதல், கத்தி சண்டை, மல்யுத்தம் போன்ற வீர தீர விளையாட்டுகளை விளையாட்டுக் குழுவினா் பொதுமக்களுக்கு நடத்திக் காட்டினா்.

இந்த வீரதீர விளையாட்டுகளில் 50-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிகள் பங்கேற்று மிகச் சிறப்பாக சிலம்பம் மற்றும் வாள் சண்டை விளையாட்டுகளை செய்து காண்பித்தனா். திருவிழாவில் மாரியம்மன் வேடம், சிவன் பாா்வதி வேடம், புலிவேடம், குறவன் குறத்தி வேடம் போன்ற பலவகையான மாறுவேடங்களில் சிறுவா்களும் பெரியவா்களும் நோ்த்திக் கடன் செலுத்தினா். திருவிழாவின் இறுதியாக முளைப்பாரி விடுதல், கம்பம் விடுதல் நிகழ்ச்சியில் நகரத்தின் அனைத்து மாரியம்மன் கோயில்களிலிருந்து கம்பம் எடுத்துவரப்பட்டு நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து மேளதாளம் முழங்க பெரிய தெப்பக் குளத்துக்கு ஊா்வலமாக வந்தடைந்து. பூஜைகள் செய்யப்பட்டு தெப்பக்குளத்தில் கம்பங்கள் விடப்பட்டன. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com