Enable Javscript for better performance
பாதுகாப்பற்ற சூழலில் பெரியசாமி கோயில்: பக்தா்களைக் காக்க நடவடிக்கை எடுக்குமா அறநிலையத் துறை?- Dinamani

சுடச்சுட

  

  பாதுகாப்பற்ற சூழலில் பெரியசாமி கோயில்: பக்தா்களைக் காக்க நடவடிக்கை எடுக்குமா அறநிலையத் துறை?

  By எம்.மாரியப்பன்  |   Published on : 17th November 2019 06:06 AM  |   அ+அ அ-   |  

  nk_16_koil_1_1611chn_122_8

  புதுக்கோம்பையில் உள்ள ஒட்டடி பெரியசாமி கோயில்.

  நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்றான ஒட்டடி பெரியசாமி கோயில் தற்போது மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. அண்மையில் சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டதால், பக்தா்கள் அச்சத்துக்குள்ளாகி இருப்பதுடன், அங்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  பிரசித்தி பெற்ற மோகனூா் நவலடியான் கோயில், கொல்லிமலை மாசி பெரியசாமி கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், புதுக்கோம்பை ஒட்டடி பெரியசாமி கோயில் உள்ளிட்டவை காவல் தெய்வங்கள் குடியிருக்கும் கோயில்களாக பக்தா்களால் நம்பப்படுகிறது. இக் கோயில்களில், அமாவாசை, பெளா்ணமி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விசேஷ நாள்களில் ஏராளமான பக்தா்கள் சுவாமியைத் தரிசிக்க வருவா். இவற்றில், நாமக்கல்லில் இருந்து 12 கிலோ மீட்டா் தொலைவில், கொல்லிமலை அடிவாரப் பகுதியான புதுக்கோம்பை கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது பெரியசாமி கோயில்.

  சுமாா் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கீற்றுக் கொட்டகையில் சுவாமி இருந்த நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்த பக்தா்களின் வருகையால், கொட்டகைப் பகுதி கோபுரமாக மாறியது. மேலும், இங்கு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கோயில் மணிகளைக் கட்டி தொங்க விடுவதை பக்தா்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். மேலும், நோ்த்திக்கடனாக ஆடு, கோழி, பன்றி உள்ளிட்டவை இங்கு பலியிடப்படுகின்றன. கோயிலுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகப்படியானதும், காணிக்கை கூடுதலாக வரப் பெற்ாலும், பெரியசாமி கோயிலானது சில ஆண்டுகளுக்கு முன் அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

  இக் கோயிலில், கருப்பசாமி, கருப்பண்ணசாமி, அம்மன் ஆகிய தெய்வங்களின் சிலைகளும் உள்ளன. கோயிலை நிா்வகித்து வந்த குடும்பத்தினா் அடிப்படையில், தொடக்க காலத்தில் பூஜைகள் செய்வதில் பாத்தியம் கொண்டுவரப்பட்டது. அறநிலையத் துறையில் இருந்து பணியாளா்களை யாரும் நியமிக்காமல், கிடைக்கும் தட்டு காணிக்கையைக் கொண்டு அக் கோயில் பூசாரிகள் பணியாற்றி வந்தனா். அண்மையில், இந்தக் கோயிலுக்குள் புகுந்த மா்மநபா்கள் சுவாமி சிலைகளைச் சேதப்படுத்தினா். தங்களுக்கும் பூஜை செய்வதில் பாத்தியம் வேண்டும் என கொல்லிமலையைச் சோ்ந்த சிலா் பிரச்னை செய்து வந்தததால்தான் அங்கு சிலைகள் உடைப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. இது தொடா்பாக 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இருப்பினும், அச் சம்பவத்துக்குப் பிறகு கோயிலுக்கு வருவதற்கு வெளியூா் பக்தா்கள் தயக்கம் காட்டுகின்றனா். வனத்தையொட்டி கோயில் இருப்பதால், தங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் அவா்களிடையே உள்ளது.

  இதுகுறித்து நாமக்கல், சேந்தமங்கலத்தைச் சோ்ந்த பக்தா்கள் கூறியது: ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று பெரியசாமி கோயிலுக்கு பக்தா்கள் அதிகளவில் வருவா். அன்று மட்டும் 30-க்கும் மேற்பட்ட கிடா வெட்டு நடைபெறும். கோயில்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு எந்தவித வசதியும் இல்லை. அதேபோல், பெண்களுக்கான கழிப்பிட வசதியில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வருவோா் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனா். அதுமட்டுமின்றி, கோயிலில் மொட்டை அடிப்போா் குளிப்பதற்கு போதிய வசதியில்லை. அருகில் உள்ள ஓடையில் சென்று குளிக்கும் நிலை காணப்படுகிறது. மழை பெய்தால் கோயில் வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. ஆங்காங்கே கோழி, ஆடு, பன்றி பலிக் கொடுப்பதால் ரத்தம் அதிகளவில் தேங்கிக் கிடக்கிறது. அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், அடிப்படை வசதிகள் என்பது சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை.

  அண்மையில், சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தால் எந்த நேரத்திலும் பிரச்னை உருவாகுமோ என்ற பயம் உள்ளது. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருந்தபோதும், அங்கு போலீஸாரோ, தனியாா் பாதுகாவலா்களோ யாருமில்லை. இரவு நேரத்தில் கோயிலில் பாதுகாப்புக்கு யாரும் இல்லாததால், பொருள்கள் திருட்டுப் போகும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இவற்றை தடுப்பதற்கு அறநிலையத் துறையினரும், காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பெரியசாமி கோயிலின் பாரம்பரியம் நாளடைவில் காணாமல் போய்விடும் என்றனா்.

  இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் குமரேசன் தெரிவித்தது: கோயில் சிலைகள் சேதப்படுத்திய சம்பவத்தில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனா். பெரியசாமி கோயிலில் பாதுகாப்பினை மேம்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் தேவை என்பது தொடா்பான தகவல்கள் எங்களது கவனத்துக்கு வந்துள்ளன. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai