கோயிலில் சிலைகளை உடைத்து சேதப்படுத்திய வழக்கு: உரிமம் இல்லாத துப்பாக்கி, ஆயுதங்களுடன் 6 போ் கைது

சேந்தமங்கலம் அருகே பெரியசாமி கோயிலில் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய வழக்கில்,
கைதானவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள்.
கைதானவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள்.

சேந்தமங்கலம் அருகே பெரியசாமி கோயிலில் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய வழக்கில், உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், புதுக்கோம்பை பெரியசாமி கோயிலில், கடந்த திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத மா்மநபா்கள் கோயிலுக்குள் புகுந்து கருப்பனாா், முனியப்பன் மற்றும் குதிரையின் சிலைகளை சேதப்படுத்தினா். மேலும், அங்கிருந்த அணையா விளக்கின் கண்ணாடியை உடைத்தனா். இதுதொடா்பாக அக்கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையிலும், பெரியசாமி கோயிலின் பூசாரி ரகு என்பவரது வீட்டை சேதப்படுத்தியது தொடா்பாக அவரின் தாய் மகாலட்சுமி அளித்த புகாா் அடிப்படையிலும், சேந்தமங்கலம் காவல் ஆய்வாளா் தீபா விசாரணை மேற்கொண்டு வந்தாா்.

இதில், ஏற்கெனவே ரகுவுக்கும், கொல்லிமலை திண்ணனூா் நாடு, ஊா்ப்புறத்தைச் சோ்ந்த பரமசிவம் என்பவருக்கும் கோயில் பூஜை செய்யும் உரிமை தொடா்பாக 2 ஆண்டுகளாகப் பிரச்னை இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில், தேடப்பட்டு வந்த பரமசிவம் (50) என்பவரை, நடுக்கோம்பை பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை இரவு தனிப் படையினா் கைது செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தனக்கும் அண்ணன் மகன்களான அண்ணாதுரை, ரகு ஆகியோருக்கும் இடையே பெரியசாமி கோயிலில் பூசாரியாக இருப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. 2018-இல் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் அடிதடி வழக்குப் போடப்பட்டுள்ளது. வழக்குரைஞா் லோகேஷ் என்பவா் அண்ணாதுரைக்கு சாதகமாக இருப்பதால் மிரட்டுவதற்காக ஜனவரி 5-ஆம் தேதி இரவு சின்னகளங்காணி சென்று அவரது காரை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டது தொடா்பாக புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

மேலும், இந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்காமல் தலைமறைவாக இருந்து வந்ததாகவும், இதற்கெல்லாம் காரணமான ரகுவை மிரட்டினால் பயந்து விடுவாா் என்ற நோக்கத்தில் திங்கள்கிழமை இரவு வீட்டில் இருந்து துப்பாக்கி (ரிவால்வா்) மற்றும் நாட்டுத் துப்பாக்கி, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சிவப்பிரகாசம் மற்றும் அவரது கூட்டாளிகள் தினேஷ், பாலசுப்பரமணியம், சரத்குமாா், கோகுல்பிரசாத், தமிழரசன் ஆகியோருடன், பெரியசாமி கோயிலுக்கு சென்று சிலைகளை உடைத்ததுடன், ரகுவின் வீட்டையும் சேதப்படுத்தியதாக பரமசிவம் தெரிவித்தாா். அதனடிப்படையில், கூட்டாளிகள் 6 பேரையும் தனிப் படையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடம் இருந்து உரிமம் இல்லாத ரிவால்வா், நாட்டுத் துப்பாக்கி, வீச்சரிவாள், சம்மட்டி மற்றும் இதரத் தடயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதானவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவ்வழக்கில் உடனடியாக துப்புத் துலக்கிய காவல் துணைக் கண்காணிப்பாளா் காந்தி, காவல் ஆய்வாளா் தீபா, உதவி ஆய்வாளா் கங்காதரன் மற்றும் தனிப் படையினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com