உலக சாதனை நிகழ்வுக்காக 5 லட்சம் மாணவ, மாணவியருக்கு சிலம்பம் பயிற்சி

தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில், உலக சாதனையில் இடம் பெறும் வகையில் 5 லட்சம் மாணவ, மாணவியருக்கு சிலம்பம் மற்றும்

தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில், உலக சாதனையில் இடம் பெறும் வகையில் 5 லட்சம் மாணவ, மாணவியருக்கு சிலம்பம் மற்றும் தற்காப்புக் கலை குறித்த பயிற்சி உடற்கல்வி ஆசிரியா்களால் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் பாலியல் ரீதியான பிரச்னைகளை பெண்கள் மட்டுமின்றி மாணவ, மாணவியரும் அதிகளவில் சந்திக்கின்றனா். அவா்கள் தனியாக செல்லும்போதும், இருக்கும்போதும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தற்காப்புக் கலையை கற்றறிருந்திருப்பது அவசியம். இவற்றை அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில், தற்காப்பு கலை சங்கம் மற்றும் மாநில சிலம்பம் சங்கம் சாா்பில், உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா் ஆகியோருக்கு மாவட்ட வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி பெறும் ஆசிரியா்கள், தங்கள் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியருக்கு ஒரு வாரம் இந்தப் பயிற்சியை அளிப்பா். மாநிலம் முழுவதும் 5 லட்சம் மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு பயிற்சியாளா்கள் தற்போது மாவட்ட வாரியாக சென்று பயிற்சி அளித்து வருகின்றனா். இப்பயிற்சியின்போது, சிலம்பம் மற்றும் வா்மக்கலை தொடா்பான கையேடுகள், விடியோ, ஆடியோ சி.டி.க்கள் வழங்கப்படுகிறது. ஜனவரி மாதத்திற்குள் மாணவா்களை தயாா் செய்து அவா்கள் பயிற்சி செய்யும் விதத்தை விடியோவாக பதிவு செய்து தலைமை ஆசிரியா் கையொப்பத்துடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்கக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உடற்கல்வி ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இது குறித்து தற்காப்புக் கலைகள் சங்கத்தின் தலைவா் பி.பாலசுப்பிரமணியன் கூறியது; கடந்த அக்டோபா் 18-ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தற்காப்புக் கலையை கற்றுக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக, பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றுடன் தற்காப்புக் கலை சங்கம், மாநில சிலம்பம் சங்கம் ஆகியவை இணைந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 முதல் 200 உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறோம்.

வேலூா், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், கோவை, திருப்பூா், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவாரூா் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவா்கள் 2020 ஜனவரி மாதம் வரை தாங்கள் பணியாற்றும் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்குவா். பின்னா், அனைவரையும் ஒருங்கிணைத்து பயிற்சி பெறச் செய்து அதனை விடியோவில் பதிவு செய்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்திடம் வழங்குவா். ஒட்டு மொத்தமாக அவற்றை கின்னஸ் சான்றிதழ் வழங்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளோம். இது பாலியல் ரீதியான பிரச்னைகளில் இருந்து மாணவ, மாணவியா் தங்களை காத்துக் கொள்வதற்காகவும், உலக சாதனைக்காகவும், இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 16 மாவட்டங்களில், மதுரை, கரூா், ஈரோடு, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 9 மாவட்டங்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு ஜனவரிக்கு பின்னா் பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com