நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலுக்கு அரசால் யானை வழங்கப்படுமா?

நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலுக்கு அரசால் யானை வழங்கப்படுமா?

பிரசித்தி பெற்ற தலங்களில் பக்தர்களை ஆசீர்வதிப்பதற்காக அரசால் கோயில்களுக்கு யானை வழங்கப்படுகிறது.  கோயில்களில் சுவாமி தரிசனம்


பிரசித்தி பெற்ற தலங்களில் பக்தர்களை ஆசீர்வதிப்பதற்காக அரசால் கோயில்களுக்கு யானை வழங்கப்படுகிறது.  கோயில்களில் சுவாமி தரிசனம்  முடித்து விட்டு வரும் பக்தர்கள் அடுத்து செல்வது யானையிடம் ஆசி பெறுவதற்காகத் தான்.   மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் இந்த நடைமுறை காலம்,  காலமாக இருந்து வருகிறது. ஆசீர்வதிப்பது மட்டுமின்றி,  விழாக் காலங்களில் சுவாமிக்கு முன்பாக அலங்கரித்துச் செல்வதற்கும் யானையை கோயில் நிர்வாகத்தினர் பயன்படுத்துவர்.
   தமிழகத்தைப் பொருத்தவரை பிரசித்தி பெற்ற தலங்களான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்,  பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்,  சமயபுரம் மாரியம்மன் கோயில்,  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்,  திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்,  சங்கரன்கோவில்,  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தலங்களில் கோயில் யானைகள் உள்ளன.   
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் சுவாமி கோயில் உள்ளது.  இக் கோயில்களுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.  இக் கோயிலில் அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதிக்கும் வகையில் தெய்வ யானை  வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.  சிவத் தலங்களில் தான் யானை இருக்கும்,  வைணவத் தலங்களுக்குத் தேவையில்லை என சிலர் கூறினாலும்,  பெருமாளுக்கும்,  யானைக்கும் சம்பந்தம் உள்ளது என பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆற்றில் தண்ணீர் பருக யானை சென்றபோது அங்கிருந்த முதலை,  யானையின் காலைக் கடிக்க,  அப்போது, அந்த யானை அழைத்தது ஆதிமூலத்தைத் தான்.  அதைத் தான் கஜேந்திர மோட்சம் என்கின்றனர்.  அதனால், நாமக்கல் நரசிம்மர் கோயிலுக்கும்,  ஆஞ்சநேயர் கோயிலுக்கும் இணைப்பாக யானையை தமிழக அரசு வழங்க வேண்டும்.  அதற்கான முயற்சிகளை அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாகும்.
இதுகுறித்து,  நாமக்கல் ஆன்மிகப் பேரவையைச் சேர்ந்த சோழாஸ் ஏகாம்பரம்,  ஆர்.பிரணவகுமார் கூறியது:  நாமக்கல்லின் அடையாளமே ஆஞ்சநேயரும்,  நரசிம்மர் சுவாமியும்தான். உலக அளவில் பிரசித்தி பெற்ற இக் கோயில்களுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.  அவர்களை ஆசீர்வதிக்கும் வகையில் யானை வேண்டும் என்பது எங்கள் சபையின் நீண்ட நாள் கோரிக்கை.  இது தொடர்பாக பலமுறை இந்து சமய அறநிலையத் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.  ஆனால்,  எவ்வித நடவடிக்கையும் இல்லை.  
சிவன் கோயில்கள் மட்டுமின்றி,  பெருமாள் கோயில்களிலும் யானைகள் உள்ளன.  நாமக்கல்லுக்கு யானை ஒன்றை அரசு வழங்கி, அதற்கு கஜேந்திரர் எனப் பெயரிட வேண்டும் என்பது நாமக்கல் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு என்றனர்.
 நாமக்கல்  ஆஞ்சநேயர் கோயில் உதவி ஆணையர் பி.ரமேஷ் கூறியது:  கோயில் யானை இருந்தால் நல்லதுதான்.  ஆனால், அதற்கு தகுந்தாற்போல் இடமில்லை.   நரசிம்மர் கோயிலில் இடம் இருந்தாலும்,  படிக்கட்டுகள் அதிகம் இருப்பதால் அதற்கான வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.  இருப்பினும்,  அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com