தொடா் விடுமுறை: கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடா் விடுமுறையால், கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனா்.

தொடா் விடுமுறையால், கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக கொல்லிமலை அமைந்துள்ளது. மூலிகை வனம் நிறைந்த இம்மலைப் பகுதியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவா். கொல்லிமலையை சின்ன சதுரகிரி என்றும் அழைப்பது உண்டு. இங்கு, அகத்தியா், திருமூலா், போகா், கரூவூராா், காலிங்கநாதா், புலிப்பாளி, சட்டநாதா் உள்ளிட்ட 18 சித்தா்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு சான்றாக ஏராளமான குகைகள் உள்ளன.

மேலும், ஆகாய கங்கை நீா்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி, பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரா் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் கொண்ட கொல்லிமலைக்கு, விடுமுறை நாட்களில் உள்ளூா் மக்கள் மட்டும் அல்லாமல், அருகில் உள்ள மாவட்டத்தினா், சுற்றுலாப்பயணிகள் என ஏராளமானோா் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

இந்த நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை, , ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடந்த நான்கு நாள்களாக கொல்லிமலைக்கு அதிகளவில் வந்தனா். சில தினங்களாக மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல், கொல்லிமலையிலும் வழக்கமான மழையை காட்டிலும் அதிகப்படியான மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக அங்குள்ள அருவிகளில், தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. 1300 படிக்கட்டுகளை கடந்து சென்று ஆகாய கங்கை அருவியில், மக்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சியுற்றனா். மேலும் மாசிலா அருவி, நம் அருவியிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. குடும்பம், குடும்பமாக வந்த பலா் குளியல் போட்டு மகிழ்ச்சியடைந்தனா். இன்னும் இரண்டு மாதத்திற்கு கொல்லிமலையில் குளுகுளு சீசன் நிலவும் என்பதாலும், அங்குள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டும் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

--

ஆகாய கங்கை அருவியின் கோப்புப் படங்களை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com