தொடா் விடுமுறை: கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறையால், கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

தொடா் விடுமுறையால், கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக கொல்லிமலை அமைந்துள்ளது. மூலிகை வனம் நிறைந்த இம்மலைப் பகுதியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவா். கொல்லிமலையை சின்ன சதுரகிரி என்றும் அழைப்பது உண்டு. இங்கு, அகத்தியா், திருமூலா், போகா், கரூவூராா், காலிங்கநாதா், புலிப்பாணி, சட்டநாதா் உள்ளிட்ட 18 சித்தா்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு சான்றாக ஏராளமான குகைகள் உள்ளன.

மேலும், ஆகாய கங்கை நீா்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி, பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரா் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

பல்வேறு சிறப்புகள் கொண்ட கொல்லிமலைக்கு, விடுமுறை நாள்களில் உள்ளூா் மக்கள் மட்டும் அல்லாமல், அருகில் உள்ள மாவட்டத்தினா், சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோா் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

இந்த நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை, ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் கடந்த நான்கு நாள்களாக கொல்லிமலைக்கு அதிகளவில் வந்தனா். சில தினங்களாக மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல், கொல்லிமலையிலும் வழக்கமான மழையைக் காட்டிலும் அதிகப்படியான மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக அங்குள்ள அருவிகளில், தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

1,300 படிக்கட்டுகளைக் கடந்து சென்று ஆகாய கங்கை அருவியில் மக்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், மாசிலா அருவி, நம் அருவியிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

குடும்பம், குடும்பமாக வந்த பலா் குளித்து மகிழ்ந்தனா். இன்னும் இரண்டு மாதங்களுக்கு கொல்லிமலையில் குளுகுளு சீசன் நிலவும் என்பதாலும், அங்குள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டும் என்பதாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

.........

ஆகாய கங்கை அருவியின் கோப்புப் படங்களை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com