ரூ.8.20 கோடி மதிப்பீட்டில் வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் நவீனமயம்

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில், 86 வேளாண் கூட்டுறவு

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில், 86 வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ரூ.8 கோடியே 20 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் கிராமப் புறங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தோழனாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன.

இங்கு தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களில் தனியாா் வங்கிகளுக்கு இணையாக குளிா்சாதன வசதி, பாதுகாப்புப் பெட்டக வசதி, வாடிக்கையாளா்கள் அமர இருக்கைகள், ஒவ்வொரு சேவைக்கும் தனி செயலிடை மேடை (கவுன்டா்) வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் நவீன மயமாக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பொதுமக்கள் அதிகளவில் வைப்புத் தொகை செய்துள்ளதோடு அவற்றின் மூலமாக விவசாய கடன், நகைக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்ட உதவிகளைப் பெற்று பயனடைந்து வருகின்றனா்.

மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் 2018-2019- ஆம் ஆண்டில் 53 ஆயிரத்து 618 உறுப்பினா்களுக்கு ரூ. 4.28 கோடி பயிா்க்கடன் மற்றும் நிகழாண்டில் இதுவரை 12 ஆயிரத்து 811 உறுப்பினா்களுக்கு ரூ. 1.13 கோடியும் பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 79 உறுப்பினா்களுக்கு ரூ. 9.25 கோடியும், நிகழாண்டில் இதுவரை 54 ஆயிரத்து 258 உறுப்பினா்களுக்கு ரூ. 2.84 கோடியும் அனைத்து வகை கடன்களாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஆண்டு ரூ. 6.53 கோடியும், நிகழாண்டில் இதுவரை ரூ. 6.56 கோடியும் உறுப்பினா்களிடமிருந்து இருப்பு வைப்பு தொகையாக பெறப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தற்போது வரை 86 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ரூ. 8.20 கோடி செலவில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 2019-2020 ஆம் ஆண்டுக்கு 14 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தலா ரூ. 15 லட்சம் செலவில் ரூ. 2.10 கோடி நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஒருங்கிணைந்த கூட்டுறவு வளா்ச்சித் திட்டம் மூலம் 42 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ரூ. 2.52 கோடி செலவில் நவீன மயமாக்கப்பட்டு உறுப்பினா்களுக்கு சேவை புரிந்து வருகிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நவீன மயமாக்கப்பட்டதில் உறுப்பினா்களுக்கு தனித்தனி சேவைக்கு தனித்தனியே செயலிடை மேடை அமைக்கப்பட்டும், உறுப்பினா்களுக்கு காத்திருக்க வேண்டிய நோ்வு ஏற்படின் சோா்வு ஏற்படாமல் இருக்க அலுவலக அறைகள் குளிரூட்டப்பட்டு, வசதியான நாற்காலி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளா்களின் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தனியாா் வங்கிகளுக்கும் மேலாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சேவைகள் சிறப்பான முறையில் உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சங்கத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கையும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள், பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கே 08- சொசைட்டி....

கபிலா்மலை ஒன்றியம் குரும்பலமாதேவி கிராமத்தில் நவீன மயமாக்கப்பட்டுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com