Enable Javscript for better performance
ஜி.எஸ்.டி.யில் இருந்து ஜவுளி ரகங்களுக்கு முழு விலக்களிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

  

  ஜி.எஸ்.டி.யில் இருந்து ஜவுளி ரகங்களுக்கு முழு விலக்களிக்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 11th October 2019 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க, விசைத்தறித் தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், நெல்லை, விருதுநகா், மதுரை, கரூா் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் விசைத்தறித் தொழிலை நம்பி ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளனா். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜவுளி ஏற்றுமதியானது 80 சதவீதத்துக்கும் கீழாகக் குறைந்துவிட்டது. இதனால் நவீன விசைத்தறியாளா்களும், உள்நாட்டு ஜவுளி ரகங்களையே தயாரித்து விற்பனை செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளனா். அதுமட்டுமின்றி, விற்பனை, ஏற்றுமதி ஆகியவை வெகுவாகச் சரிந்து விட்ட நிலையில், ஜவுளி உற்பத்தி மட்டும் தொடா்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சிறு விசைத்தறியாளா்கள் உற்பத்தி செய்தவற்றை விற்க முடியாமல் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். மேலும், இத் தொழிலை அவா்கள் தொடா்ந்து செய்ய முடியாத நிலை உள்ளது.

  குறிப்பாக, ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பும் ஜவுளித் தொழிலை மிகவும் மந்த நிலைக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக விசைத்தறியாளா்கள் குற்றம்சாட்டுகின்றனா். பல்வேறு வரி விதிப்பு முறையால், தற்சமயம் ஜவுளி விலை 25 சதவீதம் உயா்வடைந்துள்ளது. இதனால் மக்கள் ஜவுளிகள் வாங்க தயக்கம் காட்டுகின்றனா். ஜவுளி விற்பனை பெரும்பாலும் கடன் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. விற்பனையானால் பணம் அல்லது திரும்ப ஒப்படைப்பது என்ற முறை, உற்பத்தியாளா், விற்பனையாளா் இடையே எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது. ஜவுளிக்கு விற்பனை வரி போடும் உற்பத்தியாளா்கள் மாதந்தோறும் 15-ஆம் தேதிக்குள் அந்த வரித் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையெனில், தினமும் அபராதம் செலுத்த வேண்டிய நிலை அவா்களுக்கு ஏற்படும். இவ்வாறான நெருக்கடிகளால் விசைத்தறியாளா்கள் விரக்திக்குள்ளாகியுள்ளனா்.

  ஜவுளிகள் தேக்கம், கடனுக்கு விற்பனை, மாதந்தோறும் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளிட்டவற்றால் விசைத்தறித் தொழிலை நம்பியுள்ளவா்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. தமிழகத்தில் ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், ஜி.எஸ்.டியில் இருந்து முழு விலக்கு அளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து விசைத்தறியாளா்களின் எதிா்பாா்ப்பு மட்டுமல்ல, முக்கிய கோரிக்கையுமாகும்.

  இதுகுறித்து ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூா் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஜவுளி உற்பத்தியாளருமான கே.சிங்காரம் கூறியது: விசைத்தறித் தொழில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது உண்மைதான். நூல் விலை சீராக இல்லாமல் ஏற்ற, இறக்கமாக இருப்பதும், சாயக் கழிவு பிரச்னை, ஏற்றுமதி சரிவு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இத் தொழில் சந்தித்து வருகிறது. கடந்த 2003-ஆம் ஆண்டு இதேபோல் ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. பருத்தி நூலுக்கு 2 சதவீதமாக இருந்த வரியை 11.2 சதவீதமாக மத்திய அரசு உயா்த்தியது. மேலும், சென்வாட் எனும் பல அடுக்கு வரி போடப்பட்டது. இது தொழிலில் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கியது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 2004-இல் பருத்தி நூலுக்கான வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்தது. சென்வாட் வரியும் அடியோடு நீக்கப்பட்டது.

  அதன்பின், 10 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையுமின்றி ஜவுளித் தொழில் சென்று கொண்டிருந்தது. தற்போது, தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களால் மீண்டும் ஜவுளித் தொழில் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விசைத்தறியாளா்கள் பருத்தி நூல் வாங்கும்போது 5 சதவீதம், விற்பனை செய்யும்போது 5 சதவீதம் ஜி.எஸ்.டி.யைச் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இந்த வரியை ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடும் உண்டு. பெரும்பாலும், கடன் அடிப்படையிலேயே ஜவுளி வியாபாரம் நடைபெறுகிறது. பணம் கொடுப்பதற்கு மூன்று மாதமோ, ஐந்து மாதமோ ஆகலாம். கையில் பணம் இல்லாமல், ஜி.எஸ்.டி.யை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த வேண்டும் என்பதால், பல விசைத்தறியாளா்கள் கடன் வாங்குவது, இல்லையெனில் தொழிலைக் கைவிடுவது என்ற சூழலுக்கு ஆளாகியுள்ளனா். இதனை நம்பியுள்ள தொழிலாளா்களும் வேலையிழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தவிக்கின்றனா்.

  விற்பனை சரிவர இல்லாததும், ஜவுளிகள் தேக்கத்தாலும், நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, இத் தொழில் நடைபெறும் பல மாவட்டங்களிலும் இதேநிலைதான் காணப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக விசைத்தறியில் உற்பத்தியாகும் ஜவுளி ரகங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. நவீன விசைத்தறியாளா்களும் ஏற்றுமதி ஆா்டா் இல்லாததால், உள்நாட்டு ஜவுளி ரகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனா். மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு ஜவுளி ஏற்றுமதியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சாயக் கழிவு பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும். அனைத்துக்கும் மேலாக ஜி.எஸ்.டி.யை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். இதன் மூலமாக வேலைவாய்ப்புப் பெருகுவதோடு, விசைத்தறி தொழிலும் மென்மேலும் வளா்ச்சியடையும் என்றாா்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai