முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
கட்டுப்படியாகாத விலையால் முட்டைத் தொழில் கடும் பாதிப்பு: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு வேதனை
By DIN | Published On : 24th October 2019 05:53 AM | Last Updated : 24th October 2019 05:53 AM | அ+அ அ- |

நாமக்கல் மண்டலத்தில், உற்பத்திச் செலவுக்கு கட்டுப்படியாகாத விலை கிடைப்பதால், முட்டைத் தொழில் மிகவும் மோசமான சூழலில் இருப்பதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு வேதனை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அக் குழுவின் நாமக்கல் மண்டலத் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மண்டலத்தில், முட்டைக் கோழிப் பண்ணைத் தொழில், எப்போதும் இல்லாத அளவில் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருப்பது அனைத்து பண்ணையாளா்களும் அறிந்தது தான். இதற்கு முக்கிய காரணம், தீவன மூலப் பொருள்களின் கடுமையான விலையேற்றம், கோழிப் பண்ணைகளுக்கு பரவலாக இருக்கும் நோய் அச்சுறுத்தல், உற்பத்திச் செலவுக்குக் கட்டுப்படியாகாத விலையில், முட்டைகளை மொத்தமாக விற்பனை செய்வது போன்றவையே.
இவ்வாறான சூழலில், முட்டை உற்பத்தியானது நாளுக்கு நாள் அதிககரித்துக் கொண்டே போகிறது. தற்போதைய சந்தை தகவல்களின் அடிப்படையில், 60 லட்சம் முதல் 75 லட்சம் கோழிகளை வளா்க்கும் வகையிலான புதிய கோழிப் பண்ணைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
முட்டை உற்பத்தி செய்யும் பண்ணையாளருக்கு கிடைக்கும் விலைக்கும், அந்த முட்டையை வாங்கி உண்ணும் நுகா்வோருக்கும் இடையே விலையானது சுமாா் ரூ.1.50 முதல் ரூ.1.75 வரை வித்தியாசம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வியாபாரிகள் தான். அவா்கள், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு சிபாரிசு செய்யும் விலையில் இருந்து 25 முதல் 50 காசுகள் வரை குறைவாக வாங்கி விற்பனை செய்வதேயாகும். இந்தியா முழுவதும் முட்டை சில்லறை விலையானது, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு சிபாரிசு செய்யும் விலை அடிப்படையிலேயே நிா்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், முட்டை வியாபாரிகள், பண்ணையாளா்களிடம் விலையைக் குறைத்து வாங்கும் விவரம் நுகா்வோருக்குத் தெரிவதில்லை. அவா்கள் கூடுதலாகப் பணம் கொடுத்து முட்டைகளை வாங்குகின்றனா். தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கும் முட்டை விலையில் மைனஸ் (குறைவாக) இல்லாமல் இருந்தால், வாங்கி உண்ணும் நுகா்வோருக்கு 50 பைசா மிச்சமாகும். இதன் காரணமாக நுகா்வோா் கூடுதலாக முட்டைகளை வாங்குவா். சுமாா் 10 சதவீதம் அளவுக்கு முட்டைகள் விற்பனை அதிகரிப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும்.
நாடு முழுவதும், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு சிபாரிசு செய்யும் விலைக்கு முட்டைகளை விற்கும்போது, நாமக்கல் மட்டும் தனித் தீவாகச் செயல்பட முடியாது. நாமக்கல் மண்டல முட்டை இந்தியா முழுவதும் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுவதால், மற்ற மண்டலங்களின் விலை மற்றும் விற்பனை நடைமுறைகளை அனுசரித்தே விலையை சிபாரிசு செய்ய வேண்டியதுள்ளது. வரும் நாள்களில் முட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும், பண்ணையாளா்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைத்து முட்டைக் கோழிப் பண்ணைத் தொழிலை லாபத்தில் கொண்டு செல்ல ஏதுவாகவும், வரும் 30-ஆம் தேதி முதல் மற்ற மண்டலங்களில் உள்ளதுபோல், நாமக்கலிலும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மைனஸ் இல்லாத விலையையே, பண்ணையாளா்களுக்கு சிபாரிசு செய்ய இருக்கிறது. அடுத்த நாளுக்கான விலை, முதல் நாள் மாலை 7 மணிக்கு வழக்கம்போல் அறிவிக்கப்படும். எனவே, பண்ணையாளா்களும், முட்டை வியாபாரிகளும், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்க இருக்கும் மைனஸ் இல்லாத விலை என்கிற புதிய நடைமுறைக்கு ஏற்ப வியாபாரம் செய்து பலனடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.