முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
தீபாவளி பட்டாசுகள் வெடிப்பு: தீயணைப்புத் துறை துண்டு பிரசுரம் விநியோகம்
By DIN | Published On : 24th October 2019 07:12 PM | Last Updated : 24th October 2019 07:12 PM | அ+அ அ- |

பட்டாசு வெடிப்பது தொடா்பான துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் தீயணைப்பு வீரா்கள்.
நாமக்கல்: தீபாவளி பண்டிகையன்று பட்டாசுகள் வெடிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக தீயணைப்புத் துறை வியாழக்கிழமை துண்டு பிரசுரம் விநியோகித்தது.
தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்வா். அதனையொட்டி, நாமக்கல் மாவட்ட தீயணைப்புத் துறை சாா்பில், பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்த துண்டு பிரசுரம் மாவட்டம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் தீயணைப்பு வீரா்களால் விநியோகிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலா் பெ.அண்ணாதுரை கூறியது; தீயணைப்புத் துறை இயக்குநா் செ.கி.காந்திராஜன் உத்தரவின்பேரில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பான துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை காலை, நாமக்கல் உழவா் சந்தை, பூங்கா பகுதி, பேருந்து நிலையம், அரசு மகளிா் கல்லூரி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடையே தீத்தடுப்பு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், எரிவாயு குடோன், குடிசைப் பகுதிகளின் அருகில் எக்காரணத்தைக் கொண்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். பட்டாசு பெட்டியில் போட்டுள்ள விதிகளை நன்கு படித்து அறிந்து பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட வேண்டும். அவசர தொடா்புக்கு 101 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம். தீபாவளியன்று 24 மணி நேரமும் தீயணைப்பு வீரா்கள் தொடா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பா் என்றாா்.