"வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் திமுகவினர் ஆர்வம் காட்ட வேண்டும்'
By DIN | Published On : 11th September 2019 10:10 AM | Last Updated : 11th September 2019 10:10 AM | அ+அ அ- |

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் தி.மு.க.வினர் மும்முரம் காட்ட வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளில் தி.மு.க.வினர் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். இதற்காக, என்.வி.எஸ்.பி என்ற இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலியை, செப்.1-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒவ்வோர் வாக்காளரும், வாக்காளர் பட்டியலில் உள்ள தனது பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றம், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை திருத்தம் செய்து கொள்ள முடியும்.
வீடு, வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சரிசெய்யும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். நிகழாண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை சம்பந்தப்பட்ட வாக்காளர்களே திருத்தங்கள் செய்து கொள்ளலாம். இப்படி கைபேசி செயலி மூலம் திருத்தம் செய்தவர்களின் விண்ணப்பத்தை தேர்தல் அலுவலர்கள் தங்கள் வீடுகளுக்கே வந்து சரிபார்க்கும் பணியை மேற்கொள்வர். அப்படி திருத்தம் செய்ய வரும்போது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஓர் அசல் ஆவணங்களை அவர்களிடம் காண்பிக்க வேண்டும். பின்னர் வாக்காளர் கூறிய தவறுகள் திருத்திக் கொள்ளப்படும்.
வழக்கமாக வாக்குசாவடி முகவர்கள்தான் திருத்தம் செய்ய முடியும். தற்போது வாக்காளர்களே திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் வழிவகுத்துள்ளது. மேலும், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்காக செப்டம்பர் 30-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது. 2020 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் பணி நடைபெற்று வருகிறது.
அக்.15-ம் தேதி முதல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளை தொடங்கும் வகையில் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில், விடுபட்ட பெயர்கள், புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்கள் பெயர்களை சேர்க்கின்ற வகையில் நவம்பர் 30-ஆம் தேதி வரையில் வாக்காளர்களைச் சேர்க்கவும், அதற்காக நவம்பர் 2, 3 மற்றும் 9, 10 ஆகிய 4 நாள்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களில், புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குசாவடிகளுக்கு சென்று படிவம் எண்-6 ஐ பூர்த்தி செய்து பட்டியலில் இணைத்து கொள்ளலாம்.
பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய படிவம் 8, முகவரி மாற்றத்திற்கு படிவம் 8ஏ-ஐ, பூர்த்தி செய்து வாக்குசாவடியில் உள்ள அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம், இரட்டை பதிவு, ஆகிய பணிகளில் கிழக்கு மாவட்டத்திற்குள்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.