சுடச்சுட

  

  "தன்னம்பிக்கை இருந்தால் எந்த தொழிலிலும் சாதிக்கலாம்'

  By DIN  |   Published on : 12th September 2019 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயம், லாரித் தொழில் உள்பட எந்த தொழிலாக இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வெற்றிப் பெறலாம் என நாமக்கல்லில் நடைபெற்ற தொழில் முனைவோர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
   நாமக்கல்லில் தொழில் வளர்ச்சிக் கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, முன்னோடி பெண் விவசாயி செல்லம்மாள் தலைமை வகித்தார். தொழில் வாய்ப்புகள் குறித்து தொழிலதிபர் சண்முகராஜா உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக சென்னை நேஷனல் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் குழுமத் தலைவர் சந்திரமோகன் கலந்து கொண்டார்.
   அவர் கூறியது: நாமக்கல் அருகே கீழ்சாத்தம்பூரில் சாதாரண விவசாயி மகனாக பிறந்தேன். அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, மோகனூர் சர்க்கரை ஆலையில் உள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றேன். பின்னர், சென்னையில் உள்ள தனியார் நிறுனத்தில் வேலை பார்த்தேன்.
   அதன்பின், நாமக்கல்லில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் கடன் பெற்று மருதகாளி என்ற பெயரில் லாரியை வாங்கி இயக்கினேன். அதற்கு பின் தொழிலில் வளர்ச்சி பெற்று, தற்போது என்.டி.சி. என்ற பெயரில் நிறுவனமாக உருவாக்கினேன். சர்வதேச அளவில் ஏழாம் இடத்திலும், ஆசியளவில் முதல் இடத்திலும் எங்களது நிறுவனம் உள்ளது. 500 டன் வரை பொருள்களை கொண்டு செல்லும் 1,100 டிரெய்லர் லாரிகள் கொண்ட நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
   தனி நபராக இத்தொழிலை செய்ய முடியுமா என்றால் அது சந்தேகம் தான். அதில் எதிர்பார்த்த வெற்றியை என்னால் பெற்றிருக்க முடியாது. 4 பேரை இயக்குநர்களாகக் கொண்டு செயல்படும் எங்களது நிறுவனம், 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதுவரை 10 ஆயிரம் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். உலகில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எந்த இடமாக இருந்தாலும் பொருள்களை எடுத்துச் செல்லும் அளவிற்கு லாரித் தொழிலை முன்னேற்றியுள்ளோம்.
   இத்துறையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் தொழிலை எதிர்கொண்டால் எளிதில் வெற்றி பெறலாம். லாரித் தொழிலை பொருத்தமட்டில், சிந்தித்து செயல்பட்டால் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும் என்றார்.
   அதனைத் தொடர்ந்து, நாமக்கல்லில் தேநீர்க் கடை நடத்தி வரும் சித்ரா என்பவருக்கு, நம்பிக்கையாளர் விருதை முன்னோடி பெண் விவசாயி செல்லம்மாள் வழங்கி பாராட்டினார். அவர் பேசுகையில், தற்போது எனக்கு 90 வயதாகிறது. இன்று வரை எனது தோட்டத்தில் வேலை செய்கிறேன். அந்த காலத்தில், கம்பு, சோளம், தினை உள்ளிட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டதால் தற்போதும் ஆரோக்கியமாக இருக்கிறேன். இதற்கு முன்பு தென்னை மரம் ஏறி வந்தேன். கடந்த 5ஆண்டுகளாக மரம் ஏறுவதை விட்டு விட்டேன். எங்கள் தோட்டத்தில் உள்ள அனைத்து தென்னை மரங்களிலும் தேங்காய்ப் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பணிகளை செய்து வந்தேன். இந்த கால இளைஞர்களுக்கு தென்னை மரம் ஏறத் தெரியாத நிலை உள்ளது என்றார்.
   இந்தக் கூட்டத்தில், தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிறுவனர் வ.சத்தியமூர்த்தி, வாசு சீனிவாசன், மோகன், தில்லை சிவக்குமார், வழக்குரைஞர் அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
   
   
   
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai