அறிவியலுக்கும், ஆன்மிகத்துக்கும் இந்திய நாடு முக்கியத்துவம் அளிக்கிறது: சுவாமி நியாமனந்தா

அறிவியலுக்கும், ஆன்மிகத்துக்கும் அளப்பரியப் பணிகளை இந்திய நாடு செய்து வருகிறது என சுவாமி நியாமனந்தா தெரிவித்தார்.

அறிவியலுக்கும், ஆன்மிகத்துக்கும் அளப்பரியப் பணிகளை இந்திய நாடு செய்து வருகிறது என சுவாமி நியாமனந்தா தெரிவித்தார்.
 நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், பெரியூர் கிராமத்தில், பாரத அன்னை சேவா அறக்கட்டளை சார்பில் காரியாலயம் தொடக்க விழா மற்றும் பாரத மாதா சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் காரியதரிசி ஸ்ரீ சுவாமி நியாமனந்தா பங்கேற்றார். ஆர்.எஸ்.எஸ். அகில பாரத உறுப்பினர் சேதுமாதவன், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் ஸ்ரீ சுவாமி சுத்தாநந்தா, என்.டி.சி. குழுமத் தலைவர் கே.சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இந்த விழாவில் சுவாமி நியாமனந்தா பேசியது: உலகில், ஆன்மிகத்திற்கும், அறிவியலுக்கும் பல அளப்பரியப் பணிகளை இந்திய நாடு செய்து வருகிறது. நம் நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், உலகின் வளர்ச்சிக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் உள்ளிட்ட பெரியோர்கள் சமூக நலக்கருத்துகளை எடுத்துரைத்தனர். அது இன்றளவும் அனைவருக்கும் பயன்தரும் வகையில் உள்ளது.
 மனிதர்களை நல்வழிப்படுத்தும் கருவியாக ஆன்மிகம் திகழ்கிறது. நாடு முழுவதும் பயணம் செய்து அந்தக் கருத்துகளை மக்களின் மனதில் கொண்டு சேர்த்தனர். அதனால்தான் அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன. அவர்கள் கூறிய கருத்துகளைப் பின்பற்றினால்தான் அவை உலகம் முழுவதும் பரவும். அமைதியும் ஆன்மிகமும் இணைந்த வாழ்க்கையின் பலனை இன்றைய இளைஞர்கள், பெண்கள் அனைவரும் உணர வேண்டும். அதேபோல, அறிவியல் வளர்ச்சியிலும், உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்திய நாடு உள்ளது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இதனை தக்கவைத்துக் கொள்வது நமது கடமை என்றார்.
 இவ்விழாவில், நாமக்கல் தமிழ்ச் சங்கத் தலைவர் மருத்துவர் இரா.குழந்தைவேல், கம்பன் கழகத் தலைவர் வ.சத்தியமூர்த்தி மற்றும் பாரத அன்னை சேவா அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com