சுடச்சுட

  

  பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவம்: 10 பேர் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

  By DIN  |   Published on : 13th September 2019 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியதாக 10 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
   நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், எஸ்.உடுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், அதன் அருகில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் சரவணனை தாக்கினர். அங்கன்வாடி பெண் ஊழியருடன் ஆசிரியர் சரவணன் தகாத தொடர்பு வைத்திருப்பதாகவும், பள்ளி வளாகத்திலேயே தவறாக நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இத் தகவல் அறிந்து வந்த புதுச்சத்திரம் போலீஸார், ஆசிரியரை மீட்டுச் சென்று விசாரித்தனர். அதன்பின் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
   இந்த நிலையில், புதுச்சத்திரம் வட்டாரக் கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட எஸ்.உடுப்பம் பள்ளியில் வியாழக்கிழமை விசாரணை நடத்தினார். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களிடமும் சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். இது தொடர்பான அறிக்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷாவிடம் வழங்கப்படவுள்ளது.
   இதற்கிடையே, ஆசிரியர் சரவணனை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினர். அவர்களிடம், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பொன்.செல்வராஜ், சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் தீபா ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆசிரியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், எஸ்.உடுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
   இச்சம்பவம் குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார் கூறியது: ஆசிரியர் தாக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர். எங்களது துறை சார்பில், வட்டாரக் கல்வி அலுவலர் பள்ளியிலும், அக்கம், பக்கத்திலும் விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பார். அதனடிப்படையில், உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
   குழந்தைகளை அனுப்ப மறுப்பு: எஸ்.உடுப்பம் அங்கன்வாடி மைய பெண் ஊழியருடன், ஆசிரியர் மேற்கொண்டிருந்த தவறான உறவு பற்றிய தகவல் அப்பகுதியினருக்கு தெரியவந்ததால், தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் வியாழக்கிழமை காலை அங்கன்வாடி மையம் குழந்தைகள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
   அங்கன்வாடி மைய உதவியாளர் மட்டுமே பணிக்கு வந்திருந்தார். குழந்தைகள் வராதது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai