திருமணிமுத்தாற்றில் பொங்கி வரும் ரசாயன நுரையால் விவசாயம் பாதிப்பு 

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகேயுள்ள மதியம்பட்டி ஏரிக்கு திருமணிமுத்தாற்றின் நீர் ரசாயனம் கலந்து நுரையுடன் வருவதால், மழைக் காலங்களில் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்படுவதுடன்,

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகேயுள்ள மதியம்பட்டி ஏரிக்கு திருமணிமுத்தாற்றின் நீர் ரசாயனம் கலந்து நுரையுடன் வருவதால், மழைக் காலங்களில் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்படுவதுடன், விவசாயம், நிலத்தடிநீரும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மதியம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை தேங்கிய நுரையால் அப்பகுதியில் விவசாயம், போக்குவரத்து பாதித்தது.
 சேலம் மாநகராட்சிப் பகுதியில் இருந்து பரமத்திவேலூர் வரை செல்லும் திருமணிமுத்தாறு, வெண்ணந்தூர், மதியம்பட்டி வழியாக செல்கிறது. மதியம்பட்டியில் உள்ள ஏரிக்கு மழைக் காலங்களில் வரும் நீர், விவசாயத்துக்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது. இங்கிருந்து பரமத்திவேலூர் வரை சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், திருமணிமுத்தாற்றில் நீர் வரத்து
 உள்ளது.
 தற்போது மதியம்பட்டி ஏரிக்கு திருமணிமுத்தாற்றில் வரும் சேலம் மாநகராட்சிப் பகுதியின் கழிவுநீர் ரசாயன கலந்து வருவதால், மதியம்பட்டி பகுதியில் ஏரியின் அருகில் உள்ள பாலத்தில் அடிக்கடி கழிவுநீர் நுரை சூழ்ந்து காணப்படுகிறது.
 இதனால் அந்தப் பாலத்தின் வழியாகப் போக்குவரத்து பாதிப்பதுடன், அப்பகுதியின் நிலத்தடி நீரும், விளைநிலங்களும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள், விவசாயிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
 இந்தப் பாலத்தின் வழியாகத் தான் செம்மாண்டப்பட்டி, கானாம்பாளையம், ராசாம்பாளையம், ஓலப்பட்டி, நடுப்பட்டி போன்ற கிராமங்களுக்கு பொதுமக்கள் வாகனங்களில் செல்கின்றனர். மேலும் மாமுண்டி, மல்லசமுத்திரம் போன்ற பிரதான பகுதிகளுக்கும் செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத் தான் செல்ல வேண்டும். இந்தப் பாலத்தில் இது போன்று தேங்கும் ரசாயன நுரையால் மழைக் காலங்களில் போக்குவரத்துத் தடைபடுகிறது. இந்த நுரையால் விவசாயம், நிலத்தடிநீரும் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏரியில் மீன்களும் பாதிக்கப்படுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து முறையிட்டும் நடவடிக்கை இல்லாத நிலையில், மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் மேம்பாலம் அமைத்து சீரமைக்க வேண்டும் என்பது அப் பகுதியினரின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com