நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வெற்றிலைகளால் அலங்காரம்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு முதல் முறையாக ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளைக் கொண்டு சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  இந்த அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு முதல் முறையாக ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளைக் கொண்டு சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  இந்த அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரில் 18 அடி உயரம் கொண்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி நின்ற கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இங்கு தங்கக்கவசம், வெள்ளிக்கவசம் சாத்துப்படி, வடைமாலை சாத்துப்படி, முத்தங்கி அலங்காரம், வெண்ணெய்க்காப்பு அலங்காரம்  உள்ளிட்டவை செய்யப்பட்டும்,  வெற்றிலை  அலங்காரம் செய்யப்படாமல் இருந்தது. 
இந்த நிலையில், திருச்சி தில்லைபுரத்தைச் சேர்ந்த யோகராணி என்பவர், ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளைக் கொண்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு அலங்காரம் செய்வதற்கு முன்வந்தார். இதைத் தொடர்ந்து,  திருச்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை  பாக்கு மட்டையில் வெற்றிலைகளைப் பொருத்தி  அவற்றை  ஆஞ்சநேயர் சுவாமிக்கு சாத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பின்னர், குளிரூட்டப்பட்ட வாகனத்தில் நாமக்கல்லுக்கு சனிக்கிழமை அதிகாலை கொண்டு வரப்பட்டது. தினமும் சுவாமிக்கு மேற்கொள்ளப்படும் சிறப்பு அபிஷேகத்துக்கு பின்னர், நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையில், வெற்றிலை அலங்காரம் செய்யும் பணியில், 10-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் ஈடுபட்டனர்.  இதைத் தொடர்ந்து, ஒரு லட்சத்து எட்டு வெற்றிலை அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  அப்போது,  தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து கோயில் தலைமை அர்ச்சகர் வெங்கடேசன் கூறியது:-
 புரட்டாசி மாதப் பிறப்புக்கு முன்னதாக வரும் சனிக்கிழமை உற்சவப் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதன்படி,  ஆவணி மாத கடைசி சனிக்கிழமையை புரட்டாசி  முதல் சனியாகவே பக்தர்கள் கருதுவர். இந்த நாளில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பட்டு நூல் கொண்டு பூணூல் அணிவிக்கப்படும். 
இந்த விழாவையொட்டி, திருச்சியைச் சேர்ந்த உபயதாரர் ஒருவர் மூலம் ரூ.40 ஆயிரம் செலவில் ஒரு லட்சத்து எட்டு வெற்றிலையால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது.  ஸ்ரீரங்கத்தில் பாக்குமட்டையில் பூக்களைப் பொருத்தி சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுவதைப் போல, வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டது.
கற்பூர வெற்றிலையாக  இருந்தால் எளிதில் காய்ந்து விடும்.  வெள்ளை வெற்றிலையில் அலங்காரம் செய்ததால், ஒரு நாள் வரை தாக்குப்பிடிக்கும். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரை அலங்காரம் இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com