பொதுத்தேர்வில் மதிப்பெண் திருத்தச் சான்றிதழ்: ஓராண்டாகியும் வழங்காததால் மாணவர்கள் அவதி 

10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களில் பெயரில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகளை திருத்தம் செய்யக் கொடுத்து
பொதுத்தேர்வில் மதிப்பெண் திருத்தச் சான்றிதழ்: ஓராண்டாகியும் வழங்காததால் மாணவர்கள் அவதி 

10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களில் பெயரில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகளை திருத்தம் செய்யக் கொடுத்து ஓராண்டாகியும் திரும்ப வழங்கப்படாததால் அவர்கள் கவலைக்குள்ளாகி உள்ளனர்.
 ஒவ்வோர் ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், வெற்றி பெறுவோருக்கு ஜூன் மாதம் மதிப்பெண் சான்றிதழின் நகலும், அதனைத் தொடர்ந்து அசல் சான்றிதழும் அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தால் மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக வழங்கப்படும்.
 இவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் சிலவற்றில் பெயர், இன்ஷியலில் தவறுகள் நிகழும். அதனை சரிசெய்வதற்காக முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தேர்வுகள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அனுப்பப்படும் சான்றிதழ்கள் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை வந்து சேரவில்லை என்று மாணவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
 இதனால் மாணவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, மேற்கல்வி தொடர்வதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறை தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்துக்கு பலமுறை இது தொடர்பாக மாணவர்கள் தரப்பிலும், பெற்றோர் தரப்பிலும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாத நிலையில், பள்ளி மற்றும் கல்வித்துறையின் மெத்தனப்போக்கிற்கு எதிராக பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
 மாணவர்கள் பாதிப்பு: 2018-ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து 8 மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் திருத்தம் கோரி அனுப்பப்பட்டிருந்தது. இதேபோல் 2019 மார்ச் மாதம் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழிலும் திருத்தம் கோரி, சென்னை தேர்வுகள் இயக்குநரகத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதில் பெரும்பாலானவை மாணவர்களுக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
 இதனையடுத்து பெற்றோர் தரப்பிலும், இது குறித்து பலமுறை நேரில் பள்ளி நிர்வாகம், மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், கல்வித்துறை தேர்வுகள் இயக்குநரகம் ஆகிய இடங்களில் முறையிட்டும், கடிதம் வாயிலாக பல மனுக்கள் அளித்தும் மதிப்பெண் சான்றிதழ் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
 நீதிமன்றத்தை நாட பெற்றோர் முடிவு: இந்த நிலையில், மேலும் காலதாமதம் தொடர்ந்தால் மாணவரின் மேற்கல்வி பாதிக்கும் என்பதால், திருத்த மதிப்பெண் சான்றிதழ் உடனே வழங்கிட கோரி நீதிமன்றத்தை நாட பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
 இதுதொடர்பாக விரைவான நடவடிக்கையை கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 மாற்றுவழி குறித்து ஆலோசனை: முதன்மைக் கல்வி அலுவலர்
 மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் மாற்று வழி என்ன என்பது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்று நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.உஷா தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:-
 எழுத்துப் பிழை தொடர்பாக வரும் மதிப்பெண் சான்றிதழ்கள் குறித்த தகவல்களை தேர்வுகள் துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கிறோம். துறை அலுவலர்களே நேரடியாக எடுத்துச் சென்று வழங்குகின்றனர். ஒரு சிலருக்கு விடுபட்டிருந்தால், அவர்கள் மனு ஒன்றை எழுதி, மதிப்பெண் சான்றிதழ் நகல் காப்பியை இணைத்துக் கொடுத்தால், எங்களது அலுவலர் சென்னை செல்லும்போது அதனை கொடுத்து அனுப்பி, அந்த சான்றிதழின் நிலை என்னவென்பது குறித்து விசாரிக்க சொல்கிறோம். அவ்வாறு அங்கு அனுப்பப்பட்ட சான்றிதழ் இல்லையென்ற நிலை காணப்பட்டால், மாற்று வழி என்ன என்பது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com