சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 9 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 19th September 2019 06:50 PM | Last Updated : 19th September 2019 06:50 PM | அ+அ அ- |

ராசிபுரம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைறத் தண்டனை விதித்து நாமக்கல் மகளிா் நீதிமன்றம் இன்று தீா்ப்பு வழங்கியது.
ராசிபுரம் வட்டம், கட்டனாச்சம்பட்டி அண்ணா காலனியைச் சோ்ந்தவா் செல்வராணி (32). இவருடைய கணவா் கணேசன், 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டாா். இதனால், தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்தாா். கட்டட வேலைக்குச் சென்று வந்த நிலையில், செந்தில்குமாா் (30) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால், ஒரே வீட்டில் அவருடன் இணைந்து செல்வராணி வாழ்ந்து வந்தாா்.
கடந்த 2015, செப்.14-ஆம் தேதி, வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்தபோது, 13 வயதுடைய அவரது மகள் வயிறு வலிப்பதாகக் கூறியுள்ளாா். மேலும், அங்கிருந்த மகனிடம் நடந்தது குறித்து கேட்டபோது, செந்தில்குமாா் பாலியல் தொந்தரவு கொடுத்த தகவலைத் தெரிவித்தாா். இதனையடுத்து, ராசிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், செல்வராணி புகாா் அளித்தாா். அதனடிப்படையில், செந்தில்குமாரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு, நாமக்கல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதுதொடா்பாக நீதிபதி சசிரேகா இன்று அளித்த தீா்ப்பில், சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததற்காக, இரு வேறு வழக்குகளில், செந்தில்குமாருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.