பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம்
By DIN | Published On : 19th September 2019 09:21 AM | Last Updated : 19th September 2019 09:21 AM | அ+அ அ- |

பாலியல் வழக்கில் சிக்கிய, எஸ். உடுப்பம் பள்ளி ஆசிரியரை, வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே எஸ்.உடுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், புதன்சந்தை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், அருகில் உள்ள அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவருக்கும் முறையற்ற நட்பு இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் அண்மையில் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் சரவணனை தாக்கினர். இந்தச் சம்பவத்தில் ஆசிரியரைத் தாக்கியதாக 10 பேர் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே, வட்டாரக் கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட பள்ளியிலும், கிராமத்திலும் நடத்திய விசாரணை அறிக்கையின் அடிப்படையில், ஆசிரியர் சரவணனை, புதுச்சத்திரம் ஒன்றியம் கூத்தமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார் புதன்கிழமை உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அவர் கூறியது: போக்ஸோ சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கை இருக்கும்பட்சத்தில் பணியிடை நீக்கம் செய்வதற்கான வாய்ப்புள்ளது. தற்போது ஓராண்டுக்கு பணியிட மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஸ்.உடுப்பம் தொடக்கப் பள்ளியில் மொத்தம் ஒன்பது மாணவர்கள் மட்டுமே உள்ளனர். அதனால், அங்குள்ள தலைமை ஆசிரியரே பள்ளியைக் கவனித்துக் கொள்வார் என்றார்.