கோழிப் பண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த 3 பேர் மீட்பு

நாமக்கல் அருகே கோழிப் பண்ணையில் கொத்தடிமையாக இருந்த 3 பேரை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.

நாமக்கல் அருகே கோழிப் பண்ணையில் கொத்தடிமையாக இருந்த 3 பேரை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.
கருர் மாவட்டம்,  ஜெகதாபி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜூ (38).  இவரது மனைவி மகேஸ்வரி (34). இவர்களுக்கு 15 வயதுடைய ஒரு மகள் உள்ளார்.  கடந்த 2011-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் செட்டித்தோட்டம் என்ற பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் தங்கராஜுவும், மகேஸ்வரியும் பணிக்குச் சேர்ந்தனர். அங்கு, அவர்களுக்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டதாம். 
இந்த நிலையில்,  அதிகாலை 4  மணி முதல் பிற்பகல் 6 மணி வரை தொடர்ச்சியாக வேலை வாங்கி வந்ததாகவும்,  ரூ.50 ஆயிரம் வாங்கியதற்காக,  எட்டு ஆண்டுகளாக எவ்வித ஊதியமுமின்றி அவர்கள் கொத்தடிமை முறையில் பணியாற்றி வந்தார்களாம்.  
இத் தகவல் தனியார் தொண்டு நிறுவனத்துக்குத் தெரியவந்தது.  அவர்கள், நாமக்கல் சார்-ஆட்சியர் சு.கிராந்திகுமார் பதியிடம் புகார் அளித்தனர்.  அதனையடுத்து,  வியாழக்கிழமை காலை சார்- ஆட்சியர் மற்றும் மோகனூர் வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணா,  தொழிலாளர் துறை ஆய்வாளர் விஜய்,  தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் போலீஸார், சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.  பின்னர் மூன்று பேரையும் மீட்டு,  நாமக்கல் சார்-ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.  கோழிப் பண்ணை உரிமையாளரை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட மூன்று பேரையும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com