Enable Javscript for better performance
ஒழுக்கம், ஒற்றுமையைக் கற்றுக் கொடுத்த காப்பியம் கம்ப ராமாயணம்: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வி.பி- Dinamani

சுடச்சுட

  

  ஒழுக்கம், ஒற்றுமையைக் கற்றுக் கொடுத்த காப்பியம் கம்ப ராமாயணம்: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து

  By DIN  |   Published on : 23rd September 2019 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கம்ப ராமாயணம்  ஒழுக்கம்,  ஒற்றுமை,  சகோதரத்துவத்தைக் கற்றுக் கொடுத்த காப்பியம்.  இதனைப் படித்தால்,  குடும்ப உறவில் எவ்வித பிரச்னையும் ஏற்பட  வாய்ப்பில்லை என்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து கூறினார்.
  நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் சான்றோர்களுக்கு கம்பர் விருது வழங்கும் விழா மற்றும் பட்டிமன்றம் செப்.21, 22 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.  இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில்,  புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்துவுக்கு கம்பன் மாமணி விருது வழங்கப்பட்டது.  பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தம், நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஆகியோர் பங்கேற்று விருதை வழங்கினர்.  முன்னதாக,  இவ் விழாவில் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் ஆர்.குழந்தைவேல் தொடக்கவுரையாற்றினார்.  நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வி.சத்தியமூர்த்தி வரவேற்றார்.  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, கே.கே.பி.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். 
       பின்னர்,  இவ் விழாவில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து  பேசியது:  கம்ப ராமாயணம் வாழ்வியலுக்கு உதவும் காப்பியம்.  இதனை இலக்கியமாக மட்டும் பார்க்காமல் உறவு, சகோதரத்துவம் போன்றவற்றை மேம்படுத்தும் காப்பியமாகப் பார்க்க வேண்டும்.  நான் கம்பன் விழாக்களில் பங்கேற்று வந்த காரணத்தினால் தான், சட்டப்பேரவைத் தலைவராக உயர வாய்ப்பு ஏற்பட்டது.  எனக்குக் கிடைத்த பெருமை கம்பனால் கிடைத்த பெருமை ஆகும்.  இன்றைய இளைஞர்கள் மத்தியில் கம்பன் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும்.  இதனால் ஒழுக்கம், நேர்மையுடைய சமுதாயம் மலரும் என்றார்.
  இதனைத் தொடர்ந்து,  பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.   கம்பர் பெரிதும் போற்றியது  ராமன் பெருமையா?  சிறையிருந்தாள் ஏற்றமே என்ற தலைப்பில் நடந்த  பட்டிமன்றத்தில் ராமன் பெருமையே என்ற தலைப்பில், முனைவர் இரா.மாது,  க.முருகேசன், பத்மா மோகன் ஆகியோரும், சிறையில் இருந்ததாள் ஏற்றமே என்ற தலைப்பில் முனைவர் விஜயசுந்தரி, மா.சிதம்பரம், தமிழ்.திருமால் ஆகியோர் பேசினர். 
  இதில் பேசிய நடுவர்  கு.ஞானசம்பந்தம்,  கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மூலம் நல்ல விஷயங்களை காதில் கேட்கத்தான் இது போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன. தற்போது நல்ல செய்திகளைக் கேட்பது என்பது பெரிய விஷயமாக உள்ளது.  முன்பு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் இருந்தன. இப்போது இல்லை. இதனை நீக்கிவிட்டு என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.  கம்பனை பற்றி யார் பேசினாலும்,  அதில் நல்ல விஷயங்கள் இருக்கும்.  ராமாயணம் எத்தகைய பெருமை வாய்ந்தது என்பதை உணர்ந்த கம்பர் இதனைப் படைக்க  எப்படி பாடுபட்டிருப்பார் என எண்ணிப் பார்க்க வேண்டும். அக் காலத்தில் வீட்டில் பிச்சைக் கேட்பவர்கள் கூட தாயுமானவர்,  ராமலிங்க அடிகளார் பாடல் வரிகளைப் பாடியபடி தான் பிச்சை கேட்டனர்.  அந்த அளவு இலக்கிய ஞானம் இருந்தது.  தற்போதைய நிலை வேறு. நல்ல தமிழ் படிக்க வேண்டும் எனில்,  வைணவ உரையைப் படிக்க வேண்டும்.  பரிமேலழகர் வரிகளை அறிந்து கொள்ள வேண்டும்.  இந்த வரிகள் பத்து திருக்குறளுக்குச் சமம்.  கம்பராமாயணம் என்பது, எவன் ஒருவன் தாய், தந்தை பேச்சைக் கேட்டு நடக்கிறானோ, அவனுக்கு இந்த உலக உயிர்கள் துணை நிற்கும்.  எவன் மாற்றான் மனைவி மீது ஆசைப்படுகிறானோ, அது அழிவைத் தரும் என உணர்த்துவது தான் கம்பராமாயணம் என்றார். 
  இதில் நாமக்கல் கம்பன் கழகச் செயலாளர் அரசு.பரமேசுவரன்,  அமைப்பாளர் ம.தில்லை சிவக்குமார் மற்றும் கம்பன் கழக நிர்வாகிகள், தமிழார்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai