குமாரபாளையத்தில் ரேக்ளா பந்தயம்: சீறிப் பாய்ந்த குதிரைகள்!

குமாரபாளையத்தில் குதிரை வண்டி ரேக்ளா எல்லை பந்தயத்தில் உறையூர், குமாரபாளையம், கரூர் குதிரைகள் முதல் பரிசை பெற்றன. 

குமாரபாளையத்தில் குதிரை வண்டி ரேக்ளா எல்லை பந்தயத்தில் உறையூர், குமாரபாளையம், கரூர் குதிரைகள் முதல் பரிசை பெற்றன. 
குமாரபாளையம் - பவானி குதிரைவண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6-ஆவது ஆண்டாக மாநில அளவிலான ரேக்ளா எல்லைப் பந்தயம் எடப்பாடி சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.கே.நாகராஜன் தலைமை வகித்தார். குமாரபாளையம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் கேஎஸ்.பாலசுப்பிரமணி, நம்ம குமாரபாளையம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஓம் சரவணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் எம்.வெங்கிடு வரவேற்றார். 
உள்ளூர் குதிரைகள், புதிய குதிரைகள், 43 அங்குல உயரம், 45 அங்குல உயரம் மற்றும் பெரிய குதிரைகள் என ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், உள்ளூர் குதிரைகள் பிரிவில் வெங்கிடு, அரசப்பன், சிங்காரவேலு ஆகிய குதிரைகளும், புதிய குதிரைகள் பிரிவில் கரூர் பாரத், குளித்தலை முனீஸ்வரன், பழனி குமார் ஆகிய குதிரைகளும், 43 அங்குல உயரம் பிரிவில் உறையூர் விஜயா, ஆத்தூர் பச்சியம்மன், சேலம் லட்சுமி ஆகிய குதிரைகளும் முதல் மூன்றிடங்களைப்
பிடித்தன. 
45 அங்குல உயரம் பிரிவில் குமாரபாளையம் சிங்காரவேலு, அன்னூர் மூர்த்தி, திருச்சி ஏர்போர்ட் மணி, பெரிய குதிரைகள் பிரிவில் குமாரபாளையம் வெங்கிடு, ஈரோடு சரவணன், கோவை கணேஷ் ஆகிய குதிரைகள் முதல் மூன்றிடங்களைப் பெற்றன. வெற்றி பெற்ற குதிரைகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. 
குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தேவி தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ரேக்ளா பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து சென்ற குதிரைகளின் ஓட்டத்தை சாலையோரத்தில் நின்றபடி ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com