"தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அ.தி.மு.க. அரசு தான்'

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை அ.தி.மு.க. அரசுதான் நிறைவேற்றி வருகிறது என்றார் அமைச்சர் பி.தங்கமணி.

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை அ.தி.மு.க. அரசுதான் நிறைவேற்றி வருகிறது என்றார் அமைச்சர் பி.தங்கமணி.
ராசிபுரம்  அருகே அத்தனூர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த தினவிழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வெண்ணந்தூர் ஒன்றியச் செயலர் எஸ்.பி.தாமோதரன் தலைமை வகித்தார். அத்தனூர் பேரூர் செயலர் செழியன் வரவேற்றார். ஒன்றியச் செயலர்கள் இ.கே.பொன்னுசாமி,  எஸ்.பி.தாமோதரன்,  எல்.எஸ்.மணி, எஸ்.காளியப்பன், ராசிபுரம் நகரச் செயலர் எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  பி.தங்கமணி,  சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா, முன்னாள் எம்பி., பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். கூட்டத்தில் அமைச்சர்  பி.தங்கமணி மேலும் பேசியது: அண்ணா பெயரில் உள்ள இந்த இயக்கம் தான் அண்ணாவின் பிறந்த தின விழாவை கொண்டாடும் உரிமை பெற்ற இயக்கம் ஆகும்.  ஏழை, எளியோர், தொண்டர்களின் இயக்கமாக இருக்க வேண்டும் என்று எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்தினார். தற்போது ஜெயலலிதாவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மூன்றாவது ஆண்டில் நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர்., ஜெயலலிதா  ஆகியோரின் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2016 தேர்தல் அறிக்கையில் கூறியபடி  தமிழகத்தில் 11 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைந்து வருகிறது.  
தி.மு.க. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றியது இல்லை. இரண்டு ஏக்கர் நிலம் தருவதாகக் கூறியதை  நம்பி மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தார்கள். ஆனால் இரண்டு ஏக்கர் நிலம் யாருக்கும் தரவில்லை. இதே போல் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்றார்கள்.  அவர்களால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் இனி ஏமாறமாட்டார்கள். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 18 மணி நேரம் மின்தடை இருந்தது. மேலும்,  கடனில் ஆட்சியை விட்டு சென்றார்கள். இதனைத் தாண்டி ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டினார். 
தற்போது நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் பலகோடி மதிப்பில் பல்வேறு சாலை விரிவாக்கப்பணிகள், புதிய வட்டங்கள், புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மக்களை மதித்து திட்டங்களை நிறைவேற்றுவது அ.தி.மு.க.தான் என்பது மக்களுக்கு தெரியும். எனவே தொடர்ந்து மக்கள் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com