Enable Javscript for better performance
முட்டை விலை நிர்ணயத்தில் தொடரும் குழப்பம்:  என்.இ.சி.சி. கமிட்டியிடம் முறையிட முடிவு- Dinamani

சுடச்சுட

    

    முட்டை விலை நிர்ணயத்தில் தொடரும் குழப்பம்:  என்.இ.சி.சி. கமிட்டியிடம் முறையிட முடிவு

    By DIN  |   Published on : 25th September 2019 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயத்தில், தொடரும் குழப்பத்தைப் போக்க, வியாழக்கிழமை நாமக்கல்லுக்கு வரும் என்.இ.சி.சி. கமிட்டியிடம் முறையிட உள்ளதாக தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
    நாமக்கல்லில், அச் சங்கத்தின் சார்பில் மாநில அளவில் கோழிப் பண்ணையாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதில், நிறுவனத் தலைவர் ஆர்.நல்லதம்பி தலைமை வகித்தார். 
    தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவரும், நாமக்கல் மக்களவை உறுப்பினருமான ஏ.கே.பி.சின்ராஜ் கலந்து கொண்டு,  கோழிப்பண்ணை தொழிலில் மேற்கொள்ள வேண்டிய புதிய நடைமுறைகள்,  தீவன உற்பத்தி,  உள்நாட்டு முட்டை விற்பனை,  வெளிநாட்டு ஏற்றுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.  பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது;  கோழிப்பண்ணைத் தொழில் மிகவும் நசிவடைந்து உள்ளது.  முட்டைக்கு சரியான விலை கிடைக்காத நிலை இருக்கிறது.  முட்டைக் கோழிகள் விற்பனை செய்வதிலும் இழப்பு ஏற்படுகிறது.
      தீவனங்கள் இறக்குமதி செய்வதிலும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன.  இதனைப் போக்க மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  அதனடிப்படையில் விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு, மத்திய கால்நடை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. 
    அதேபோல்,  இங்குள்ள பண்ணையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நாமக்கல்லை பறவைக் காய்ச்சல் இல்லாத தனி மண்டலமாக அறிவிப்பதற்கான வரைவு அறிக்கையை தயார் செய்யவும் அந்த அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
    இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பறவைக் காய்ச்சல் தாக்கினாலும்,  அது நாமக்கல் மண்டலத்தைப் பாதிக்கிறது.  தமிழ்நாடு வெப்ப மண்டலமாக உள்ளதால்,  எளிதில் பறவைக் காய்ச்சல் தாக்க வாய்ப்பில்லை.  மத்திய அரசு தனி மண்டலமாக அறிவித்து விட்டால்,  உலக நாடுகள் பலவற்றுக்கு முட்டைகள் ஏற்றுமதியாகும்.  அதிகளவில் மக்காச்சோளம் இறக்குமதி செய்து குடோன்களில் தேக்கி வைத்து விநியோகிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.  பண்ணையாளர்கள் பெற்றுள்ள வங்கிக் கடனுக்கான தவணையை ஓராண்டுக்கு பின் செலுத்த வங்கி நிர்வாகங்கள் உத்தரவிட வேண்டும். 
    சத்துணவு முட்டைக்கு விலை நிர்ணயம் செய்ய ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டு,  வாரந்தோறும் அதற்கான கூட்டம் நடத்தப்படும்.  வரும் வியாழக்கிழமை(செப்.26) நாமக்கல்லுக்கு வருகை தரும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்.இ.சி.சி.)விடம், தற்போது முட்டை கொள்முதல் விலையில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக முறையிடப்படவுள்ளது என்றார்.
    இதில், கோழிப் பண்ணையாளர்கள் சங்கச் செயலர் சுந்தர்ராஜ்,  துணைத் தலைவர் வெங்கடாசலம்,  பொருளாளர் இளங்கோ, கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் மற்றும் பண்ணையாளர்கள்,  தீவன மூலப்பொருள்கள் சங்க வியாபாரிகள், முட்டை மற்றும் கோழி வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai