24,075 பேர் எழுதும் ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆட்சியர் ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் தேர்வில் 24,075 தேர்வர்கள் பங்கேற்கவுள்ளதால்

நாமக்கல் மாவட்டத்தில் முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் தேர்வில் 24,075 தேர்வர்கள் பங்கேற்கவுள்ளதால்,  11 மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் நிகழாண்டுக்கான முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1-க்கான நேரடி நியமன போட்டி எழுத்துத் தேர்வில்(இணைய வழி) மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  
இதில், ஆட்சியர் பேசியது; வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 11 தேர்வு மையங்களில் 24,075 தேர்வர்கள் முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் தேர்வை எழுதவுள்ளனர். 
வினாத்தாள்களைப் பாதுகாப்பாக வைக்கப்படும் கட்டுக் காப்பகங்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு எடுத்துச்செல்லும் பணிகளின்போது காவல் துறையினர் முழுமையான அளவில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  மேலும் தேர்வு முடிவுற்ற பிறகு விடைத்தாள்களை விடைத்தாள் சேகரிப்பு மையத்துக்கு எடுத்து வருவதற்கும்,  ஆயுதம் ஏந்திய காவலர்களை நியமனம் செய்திட வேண்டும்.  தேர்வு மையங்களில் ஒழுங்கீனங்களைத் தவிர்க்கும் பொருட்டு சார் -ஆட்சியர்,  கோட்டாட்சியர் மேற்பார்வை செய்ய வேண்டும்.  தேர்வு நாளன்று தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின் விநியோகம் செய்திட வேண்டும். தேர்வு நாள்களில் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு போக்குவரத்து சீராக அமைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  முதன்மை கல்வி அலுவலர் தேர்வு மையங்களுக்குப் போதுமான பணியாளர்களை நியமனம் செய்து தேர்வு நல்ல முறையில் நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன்,  முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா,  மாவட்ட கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com