காலாண்டுத் தேர்வு முடிவுகளை ஒப்படைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டத்தில், நடைபெற்று முடிந்த  10 மற்றும் 11, 12-ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு முடிவு

நாமக்கல் மாவட்டத்தில், நடைபெற்று முடிந்த  10 மற்றும் 11, 12-ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு முடிவு விவரங்களை,  முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆ.ராமு வெளியிட்டுள்ள அறிக்கை:  நாமக்கல் மாவட்டத்தில் 174 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10 மற்றும் 11, 12-ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு திங்கள்கிழமை முடிவுற்ற நிலையில்,  வரும் வியாழக்கிழமைக்குள் அனைத்து விடைத்தாள்களை திருத்தம் செய்து மதிப்பெண்கள் விவரத்தை ஒப்படைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  மேலும், மதிப்பெண் பட்டியலைப் பார்வையிட்டு, பள்ளி திறக்கும் நாளான அக்.3-ஆம் தேதியன்று முதன்மை கல்வி அலுவலகம் ஒரு பட்டியலை தலைமை ஆசிரியர்களிடம் வழங்கும் என்ற புதிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 
ஏனெனில்,  புதன்கிழமை முதல் நீட், ஜே.ஈ.ஈ. பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர்கள் சிலர் செல்ல வேண்டியது உள்ளது.  தான் பயிற்றுவிக்கும் வகுப்பில், அதிக மாணவர்களைக் கொண்ட ஆசிரியர்கள், இரண்டு நாள்களுக்குள் விடைத்தாள்களை வேகமாக மதிப்பீடு செய்வது என்பது சிரமமானதாகும்.  திருத்தம் செய்யப்படட்ட விடைத்தாள்களை மாணவர்களிடம் கொடுத்து, அவர்கள் நிறைகுறைகளை எடுத்துச் சொல்லி, பின்னர் மதிப்பெண்களை பதிவேட்டில் பதிவு செய்வதே நடைமுறை.  ஆனால், தேர்வு முடிந்த மூன்றாவது நாளில் மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்ற  நடைமுறை, வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாததாகும்.  விதிமுறைகளுக்கு முரணான அறிவிப்பாகவும் இது உள்ளது. இத்தகைய அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும், அக்.2-ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது.  இது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உளவியல் வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட விடுமுறை.  இந்த விடுமுறை காலத்தில் எந்தப் பள்ளியிலும் சிறப்பு வகுப்பு நடத்தக் கூடாது. 
மீறினால் பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு செய்துள்ள நிலையில்,  தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை சிறப்பு வகுப்பு எடுக்க கட்டாயப்படுத்தி வருகின்றனர்.  அது குறித்து கேட்டால், முதன்மை கல்வி அலுவலரின் வாய்மொழி உத்தரவு என்கின்றனர்.  
சிறப்பு வகுப்புக்காக மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்,  அதற்கு சிறப்பு வகுப்பு நடத்திய ஆசிரியர்களே பொறுப்பு ஏற்கக்கூடிய சூழல் உள்ளது.  எனவே, சிறப்பு வகுப்பு நடத்த ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com