குமாரபாளையத்தில் தற்கொலை தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

தனியார்  நிதி நிறுவனங்களில் கடன் பெற்று,  திரும்பச்  செலுத்த முடியாமல் அவமானத்தால் தற்கொலை செய்து

தனியார்  நிதி நிறுவனங்களில் கடன் பெற்று,  திரும்பச்  செலுத்த முடியாமல் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்வதைத்  தடுக்கத் தேவையான  நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் பங்கேற்ற  ஆலோசனைக்  கூட்டம் குமாரபாளையத்தில் அண்மையில் நடைபெற்றது. 
குமாரபாளையம் அனைத்து பொது நல கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வழக்குரைஞர் தங்கவேல் தலைமை வகித்தார். அதிமுக நகர துணைச் செயலர் ஏ.ஜி.என்.திருநாவுக்கரசு, திமுக நகரச் செயலர் கோ.வெங்கடேசன், மக்கள் நீதி மய்யம் நகரச் செயலர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் கேசவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விசைத்தறித் தொழிலாளர்கள் நிறைந்த குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் நுண்கடன் நிறுவனங்களிடம் கடன் பெற்று வருகின்றனர். மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவி, பல்வேறு காலச்சூழலால் குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்பச் செலுத்த முடியாதபோது மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும், கடன் கொடுத்தோர் வீட்டுக்கு வந்து மிரட்டியும், அவமதித்தும் பேசிக் கடன் தொகையை வசூலிக்கின்றனர். 
இதனால், அவமானம் தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்து கொள்வதும், தற்கொலைக்கு முயற்சிப்பதும் தொடர்ந்து வருகிறது. எனவே, முடிந்தவரையில் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறாமல் இருக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். கடனை வசூலிக்க மிரட்டப்பட்டால், நிதி நிறுவனத்திடம் பேசிக் கடன் தொகையை செலுத்த கால அவகாசம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். 
அத்துமீறி கடனை வசூலிக்கும் நிதி நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து பாதுகாப்பு வழங்கக் கோருதல், பொதுமக்களிடையே தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் நம்ம குமாரபாளையம் அமைப்பு கிஷோர், விடியல் பிரகாஷ், தளிர்விடும் பாரதம் சீனிவாசன், விசைத்தறி சங்கப் பிரதிநிதிகள்  வெங்கடேசன், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com