ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் தேர்தல்:  இல.கணேசன்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அம் மாநில

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அம் மாநில மக்கள் வரவேற்றுள்ளனர்.  இதனால் விரைவில் அம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  அங்கு பாஜக வெற்றி பெறும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும்,  தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் குறிப்பிட்டார்.
அரசியலமைப்புச் சட்டம் 370 / 35 அ  நீக்கம் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பாஜக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மாவட்ட பாஜக சார்பில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 / 35 அ நீக்கம் குறித்த மக்கள் சந்திப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் கே.ஜெகநாதன் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.  தொடர்ந்து பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநிலத் தலைவருமான இல.கணேசன் சட்டப்பிரிவு 370 / 35 அ நீக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். 
இதில் மேலும் பேசிய அவர்,  காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டது, பாஜக ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் கூறிவந்தது தான்.  தற்போது பாஜக 2-வது முறையாக பொறுப்பேற்றவுடன், ஜனநாயக முறையில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி,  மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதலோடுதான் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  இதில் எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல்,  ஜனநாயகம் மீறும் செயல் அல்ல.  காங்கிரஸ் ஆட்சியின்போதுதான்,  யார் ஒப்புதலும் இல்லாமல்,  ஜனநாயகத்துக்கு விரோதமாக தன்னிச்சையாக அவசர நிலை பிரகடனம் இரவோடு இரவாகச் செய்யப்பட்டது.  இதனால் ஜனநாயகம் குறித்து பேசும் தகுதி காங்கிரசுக்கு இல்லை. மேலும், நாட்டில் லஞ்ச ஊழல் எந்த உருவிலும் இருக்கக்கூடாது என்று தான்,  அனைவருக்கும் வங்கி எண், ஆதார் கார்டு, பான்கார்டு கொண்டு வரப்பட்டுள்ளது.  தற்போது ஒரே கார்டு கொண்டு வரும் திட்டமும் உள்ளது. இதனால் ஊழல் தடுக்கப்படும் என்றார்.
 முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன்,  ஜம்மு-காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.  இதனால் காஷ்மீரில் சில பிரச்னைகள் இருந்தாலும்,  காலப்போக்கில் அது நீங்கிவிடும்.   இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பாஜகவின் 100 நாள் சாதனைகளில் 370 பிரிவு நீக்கம், முத்தலாக் தடை மசோதா  போன்றவை முக்கிய சாதனையாகும்.  கடந்த 5 ஆண்டுகளில் இந்த ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.  அனைவருக்கும் வங்கித் திட்டம், மின்னணு பணப் பரிவர்த்தனை, ஆதார் அட்டை போன்ற பல்வேறு திட்டங்களால் போலிகள் தடுக்கப்பட்டுள்ளன.  தற்போது பொருளாதார சீரமைப்புகளை நோக்கியே நிதி அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.    பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சிறு-குறு தொழில்கள் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.  
 லஞ்ச-லாவண்யங்களில் ஈடுபட்டுள்ளோர் நீதிமன்றங்கள் முன்பு நிறுத்தப்பட்டு வருகின்றனர்.  பிரதமரின் வெளியாட்டுப் பயணம் உலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும்,  இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது.  அமெரிக்கா,  ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் அழைத்தால் மத்தியஸ்தம் செய்வேன் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு மாநிலம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது.  பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர்,  சீனா ஆக்கிரமிப்பு பகுதி இந்தியா வசம் வரும்.  நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நான்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறது.  அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.  அதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக -பாஜக கூட்டணி போட்டியிடும் என்றார் இல.கணேசன். 
 இந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பாஜக-வின் நாமக்கல் மாவட்டத் தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி,  பொருளாளர் வி. சேதுராமன், வழக்குரைஞர் மனோகரன், ராசிபுரம் நகரத் தலைவர் எஸ்.மணிகண்டன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com