தம்பதியரை கொன்ற வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருச்செங்கோடு அருகே தம்பதியரை கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

திருச்செங்கோடு அருகே தம்பதியரை கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் போக்கப்பாளையம் கரட்டுக்காட்டில் முத்துசாமி(75), அவரது மனைவி பெருமாயி(72) இருவரும் தங்களுடைய விவசாய நிலம் உள்ள பகுதியில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.  இந்த நிலையில், கடந்த 2011 நவம்பர் 25-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள குப்புசாமி என்பவர் பால் வழங்குவதற்காக, தோட்டத்து வீட்டிற்கு சென்றார்.  அப்போது, முத்துசாமியும், பெருமாயியும் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொலையாகி கிடந்தனர்.  கழுத்தில் கிடந்த நகைகள் திருட்டு போயிருந்தன.  அதனையடுத்து, முத்துசாமி மகன் நல்லதம்பி அளித்த புகாரின் அடிப்படையில்,  திருச்செங்கோடு புறநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், குமரமங்கலம் பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த பாலாஜி(20) மற்றும் 18 வயதுடைய சிறுவன் ஒருவரும் ஈடுபட்டது தெரியவந்தது.  அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.  இந்த வழக்கு, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கில், ஐந்து பிரிவுகளில் பாலாஜிக்கு  இரட்டை  ஆயுள் தண்டனையும், 25 ஆண்டுகள் தண்டனையும்,  ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டதுடன்,  தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ஹெச்.இளவழகன் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.  18 வயதுடைய சிறுவன் வழக்கு,  நாமக்கல் சிறுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால்,  தற்போது அவருக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com