கோயில்களை அலங்கரிக்கும் வண்ண ஓவியங்களை வரையும் முதியவர்!

தனது 77-ஆவது வயதிலும், கோயில்களின் விட்டத்தில் வண்ண ஓவியங்கள் வரைவதை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து
கோயில்களை அலங்கரிக்கும் வண்ண ஓவியங்களை வரையும் முதியவர்!

தனது 77-ஆவது வயதிலும், கோயில்களின் விட்டத்தில் வண்ண ஓவியங்கள் வரைவதை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வருகிறார் ராசிபுரத்தை பூர்விகமாகக் கொண்ட முதியவர் ஆர்.மாணிக்கம். 
பார்த்து, பார்த்து ரசிப்பது இயற்கையையும், இயல்பாக இருக்கும் ஓவியங்களையும்தான். எத்தனை கலைகள் இருந்தாலும், வரை கலை என்பது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. கண்கள் பார்க்க, கைகள் பேசக்கூடியது.  50 ஆண்டுகளுக்கு முன் ஓவியக்கலை என்பது பலரது வரவேற்பையும் பெற்ற ஒன்று.  தாங்கள் திரையில் ரசிக்கும் நட்சத்திரங்களை கண் முன் நிறுத்தியதில் பல ஓவியர்களுக்கு பங்கு உண்டு. கோயில்களில் தெய்வங்களைத் தரிசிக்கும் பக்தர்கள் அவற்றின் ஸ்தல வரலாறுகளை, ஓவியங்களைப் பார்த்து, படித்து அறிந்து கொள்வர்.  அந்த ஓவியங்கள் என்றும் மனதை விட்டு அகலாதவை.
தனது 18 வயதில் ஓவியம் வரைவதற்காக தூரிகையை பிடித்தவர் தனது 77-ஆவது வயதிலும் அதை தொடர்ந்து கொண்டிருக்கிறார். 
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்தபோது, ராசிபுரம் திருவேங்கடவிலாஸ் பள்ளி பகுதியில் வசித்து வந்த அவர்,  அங்கு 10-ஆம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் சுய தொழில் புரிய விரும்பி சேலத்திற்கு வந்தார்.  அப்போது ஏற்காடு அடிவாரப் பகுதியில் செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸில் ஓவியப் பணியில் சேர விரும்பினார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஏ.வி.ஆர்.மணி என்பவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.  அவரிடம் தொழில் கற்று திரைச்சீலைகளில் வண்ண ஓவியங்களை வரைந்து பழகினார்.  நாளடைவில் தனியாக வரையும் அளவில் தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.  50 ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளும், கோயில்களும் தான் மக்களின் நிம்மதிக்குரிய இடம்.
அங்கு வருவோர் ரசிப்பது இயல்பான ஓவியங்களை தான்.  இரவு, பகல் பாராமல் உழைத்த அவர்,  பல வண்ண ஓவியங்களைத் தீட்டினார்.  அதனைத் தொடர்ந்து, 30 ஆண்டுகள் திருப்பூரில் தங்கியிருந்து ஓவியத் தொழிலைச் செய்து வந்தார்.  கட்அவுட் கலாச்சாரம், பெயிண்டிங் ஓவியம் வரைதல் மறைந்து, கணினியில் பேனர்களாக உருவெடுத்து விட்டதால், கைகளால் வரையப்படும் ஓவியதற்கான மவுசு குறைந்தது.  இருப்பினும்,  தான் கற்ற கலையைக் கைவிடாமல் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.  கோயில்களின் சுற்றுப்புறங்களில் வரைந்த ஓவியங்களைக் காட்டிலும்,  விட்டத்தில் வரைந்துள்ள ஓவியங்கள் தான் பலரையும் ரசிக்க வைக்கும்.  சற்று நேரம் தலையை நிமிர்ந்து பார்த்தாலே கழுத்து வலி, தலைவலி ஏற்படுவோருக்கு  மத்தியில் ஒரு வாரம் தொடர்ந்து விட்டத்தில் வரைந்து பார்ப்போரை பரவசப்படுத்துகிறார் அவர்.
தள்ளாத வயதிலும், தளராமல் தனது ஓவியப் பணியைத் திறம்பட செய்து வரும் முதியவர் ஆர்.மாணிக்கம் கூறியது;  வயது 76 முடிந்து 77 பிறந்து விட்டது.  ஒரு மகன், ஒரு மகள். இருவரும் சேலத்தில் தான் வசிக்கின்றனர். தற்போது  அவர்களுடன் தான் இருக்கிறேன். சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம். பத்தாம் வகுப்பு வரை படித்த நிலையில், வேலை தேடி சேலம் வந்தபோது தான் ஓவியம் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதை கற்றுக் கொண்ட பின் வேறு தொழில் எதையும் கற்கவில்லை. இத் தொழிலுக்கு வந்து 55 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. அப்போது ஓவியத்திற்கு இருந்த வரவேற்பு தற்போது இல்லை. எல்லாம் கணினியில் பதிவு செய்து காப்பியாக எடுக்கின்றனர். திறமையை வெளிப்படுத்த யாருக்கும் வாய்ப்பில்லை. கடந்த சில ஆண்டுகளாக கோயில்கள், பள்ளிகளில் ஓவியம் வரைவதற்கு அழைக்கின்றனர். அதற்கு சென்று வருகிறேன். கோயிலின் மேற்புறத்தில்(விட்டம்) வரைவதற்கான அழைப்புதான் அதிகம் வருகிறது. நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.600 கொடுக்கின்றனர். 
ஒரு படம் வரைவதற்கு 5, 6 நாள்கள் வரை ஆகும். முதலில் பென்சிலால் சுவரில் வரைந்து விட்டு, அதன்பின் அதற்கேற்ற வர்ணத்தை தீட்ட வேண்டும்.  உதவியாளர் யாரையும் வைத்துக் கொள்வதில்லை. தவறு நிகழ்ந்தாலும் அது என்னோட போய்விட வேண்டும் என்பதற்காகத்தான். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்குச் சென்று வந்துள்ளேன்.  நம் எண்ணம் எங்கும் சிதறாமல் வரைந்தால் நிழலும் நிஜமாக காட்சியளிக்கும். ஓய்வாக இருக்கும் நேரங்களிலும், அதற்கென உள்ள வெள்ளை அட்டைகளை வாங்கி வந்து அதில் பிடித்த ஓவியங்களை வரைவேன்.  உடலில் வலுவிருக்கும் வரை  இறைவனின் படங்களை கோயில்களை வரைய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.  பயிற்சியும், முயற்சியும் இருந்தால் ஓவியத் தொழில் மட்டுமல்ல, எந்தத் தொழிலிலும் சாதிக்கலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com