அக். 10-இல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்: பல்கலை. துணை வேந்தர் சி.பாலச்சந்திரன்

அக். 10-இல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மருத்துவர் சி.பாலச்சந்திரன்  தெரிவித்தார். 

அக். 10-இல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மருத்துவர் சி.பாலச்சந்திரன்  தெரிவித்தார். 
உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் அந்தந்தப் பகுதி கால்நடை மருத்துவமனைகளில், செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.  நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மருத்துவர் சி.பாலச்சந்திரன் பங்கேற்று, முகாமுக்கு வந்திருந்த செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசிகளை அளித்தார்.  
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  உலகளவில் வெறிநோய் கடியினால் பாதிக்கப்பட்டோர், மூன்றில் ஒரு பங்கு பேர் இருப்பது இந்தியாவில் தான். ஓரிரு ஆண்டுகளில் மட்டும் 20 ஆயிரம் பேர் இந் நோய்த் தாக்குதலால் உயிரிழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த நோயால் மனித இறப்புகள் இல்லை என்ற இலக்கைக் கொண்டு வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 
சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலி, சென்னை புறநகர் கால்நடை மருத்துவமனை ஆகிய இடங்களிலும் இம் முகாம்கள் நடைபெறுகின்றன.
வெறிநோயைத் தடுக்க வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மட்டுமல்லாமல், தெருநாய்களுக்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் தடுப்பூசி போடப்பட்டு, கருத்தடையும் செய்யப்படுகிறது.
கால்நடை மருத்துவக் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புக்கான சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில்,  அந்த படிப்புக்கான வகுப்புகள் அக். 10-ஆம் தேதி தொடங்க உள்ளன. கால்நடைப் படிப்புகளில் நீட் நுழைவுத் தேர்வு என்பது கிடையாது.  வழக்கம்போல பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்களைக் கொண்டே சேர்க்கை நடைபெறுகிறது.
மேலும், மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரிக்க, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  செயற்கை முறை கருவூட்டல், பாலினம் பிரிக்கப்பட்ட விந்தணுக்களைக் கொண்டு செயற்கை முறை கருவூட்டல் போன்ற பணிகளையும் செய்து வருகிறோம்.
இந்த ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் புதிதாக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பால்வள நுண்ணுயிரியல், ஒசூரில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் எம்.டெக். இ-பவுல்ட்ரி டெக்னாலஜி, கொடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.டெக். பால்வள தொழில்நுட்பம் மற்றும் எம்.டெக். பால்வள வேதியியல் ஆகிய புதிய பாடப் பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.  இதற்காக பல்கலைக்கழக அளவில் பூர்வாங்க சேர்க்கைப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பதிவாளர் பி.டென்சிங் ஞானராஜ்,  நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தலைவர் மருத்துவர் பி.மோகன்,  கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் வி.பி.பொன்னுவேல், நகராட்சி ஆணையர் கே.எம்.சுதா, கால்நடை மருத்துவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com